படம்: நந்தி வர்மன்
நடிப்பு: சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர், ஆடுகம் முருகதாஸ், கோதண்டம், ஜே.எஸ்.கோபி,
தயாரிப்பு: அருண்குமார் தனசேகரன்
இசை: ஜெராட் ஃபெலிக்ஸ்
ஒளிப்பதிவு: ஆர். வி.சேயோன் முத்து
இயக்கம்: ஜி. வி.பெருமாள் வரதன்
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
பல்லவ மன்னன் நந்திவர்மன் தன் எதிரிகளை போரிட்டு வென்று தோற்கடித்தான். அவன் கையில் ஒரு வாள் உண்டு. கண்ணுக்குத் தெரியாத அந்த வாள் கைப்பிடி மட்டும் தெரியும் . எதிரியை கொல்லும்போது மட்டும் அதன் கூர்மை வெளிப்படும் . அந்த அதிசயமான வாள் மற்றும் அனுமந்தீஸ்வரர் ஆலயம், கோயிலின் தங்க பொக்கிஷம் எல்லாம் பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது . வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒரு குழு அமைத்து அப் பகுதியில் உள்ள அனுமந்தபுரத் துக்கு சென்று புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் அந்த ஊரில் பல்வேறு அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்கின்றன. எல்லா இடைஞ்சல் களையும் எதிர்கொண்டு ஆராய்ச்சியாளர் போஸ் அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் நடராஜர் சிலையையும் கோயிலையும் கண்டுபிடிக்கிறார். அங்கு வரும் சிலை கடத்தல் கூட்டம் அவர்களை பூமிக்கு அடியிலேயே கொல்ல திட்டமிடு கிறது. இதன் முடிவு என்ன ? பூமிக்கு அடியில் புதைந்த பொக்கிஷம் எடுக்கப்பட்டதா? நந்திவர்மன் கையில் இருந்த கண்ணுக்கு புலப்படாத வாள் திரும்ப கிடைத்ததா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
மன்னன் நந்திவர்மனின் வரலாற்றை கண்டுபிடிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி துறை யின் கதையாக இது தொடங்கு கிறது. போஸ் வெங்கட் அனுமந்த புறத்திற்கு சென்று புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொள்ள பள்ளம் தோண்டிய உடனே அங்கு அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பித்து விடுகின்றன.
பூமிக்கு அடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த நடராஜா சிலை வெளிப்படும் போது. மேகங்கள் திரண்டு கருமேகம் உருவாகி இடி இடித்து, மின்னல் பாய்ந்து நடக்கும் பயங்கரம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
வரலாற்று ஆய்வு என்ற பெயரில் மேம்போக்காக காட்சிகளை அமைத்து விடாமல் அதற்காக அகழாய்வு செய்வது போல் பள்ளங்கள் தோண்டி அங்கு பழமையான பொருட்கள், பழமையான சிலைகள் கண்டறி யப்படுவதெல்லாம் நம்பும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் கைவண்ணத்துக்கு ஒரு சபாஷ் போடலாம் .
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் ரவி ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் அவருக்கு மனதில் பதியும் பாத்திரம் அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாக இருப்பாரோ என்று எண்ண வைத்து திடீரென்று அவரை ஆஷா உடன் காதல் வலையில் கோர்த்து வில்லத்தன முகத்தை ஈரத்தனமாக மாற்ற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
புதைபொருள் ஆராய்ச்சி, தமிழர் கலாச்சாரம் கண்டுபிடிப்பு நந்திவர்மன் வரலாற்று கண்டுபிடிப்பு என்று ராவாக சென்று கொண்டு இருந்த கதையில் சுவாரஸ்யம் சேர்ப்பதற் காக சுரேஷ் ரவி , ஆஷா காதல் விளையாட்டை இணைத்திருக்கும் இயக்குனர் ரசிகர்களை இளைப்பாற செய்கிறார். ஆனாலும் அந்த காதல் முற்றிய காதலாக இல்லாமல் மொட்டு காதலாகவே மலர்ந்து முடிகிறது.
சிலை கடத்தல் பேர் வழியாக கஜராஜ் அவருக்கு துணை நிற்கும் பாத்திரத்தில் நிழல்கள் ரவி வில்லத்தனங்களை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள. வில்லன் என்றாலே சிரிப்பார்கள் போலிருக்கிறது. காலம் காலமாக தமிழ் சினிமாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் இவர்கள் இருவரும் இந்த வேலையைத்தான் செய்திருக்கிறார்கள்
கிளைமாக்சில் இருவரும் எதற்காக சிரிக்கிறார்கள் என்றே தெரிய வில்லை வீரப்பா போல் சிரித்து நடித்திருக்கிறார்கள்.
சில காட்சிகள் திடீர் திடீரென்று ஜம்ப் ஆகிறது அதெல்லாம் பட்ஜெட் குறைபாடா என்று தெரியவில்லை. அதை எடிட்டிங்கில் இன்னமும் சரி செய்து இருக்கலாம்.
ஏ கே ஃபிலிம் பேட்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார்.
ஜி வி பெருமாள் வரதன் படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு வித்தியாசமான கதையை சொல்லிவிட வேண்டும் என்ற முயற்சி அவரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. அதற்காக அவர் கருவாக எடுத்துக் கொண்டு இருக்கும் நந்திவர்மன் கதை அதற்கு கை கொடுத்தாலும் காட்சிகளுக்கான பிரம்மாண்டம் இல்லாமல் இருப்பது ஒரு மைனஸ். . ஆனாலும் போர் அடிக்காமல் அமானுஷ்யம் வரலாற்று பின்னணி, சரித்திரம் தமிழர் பண்பாடு என்றெல்லாம் ஈர்க்கக்கூடிய வார்த்தைகளை சொல்லி கதையில் கவனத்தை கவர்ந்து விடுகிறார் இயக்குனர்.
இசை அமைப்பாளர் ஜெரால்ட் ஃபெலிக்ஸ் தன்னால் இயன்ற அளவு காட்சிகளுக்கு பொருத்த மான இசை அமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சேயோன் முத்து கவனத்தை திசை திரும்பவிடாமல் மாறுபட்ட கோணங்களில் காட்சி களை படமாக்கி கண்களை திரையை விட்டு அகலலாமல் செய்திருக்கிறார்.
நந்திவர்மன்- பிரம்மாண்டமாக எடுக்க வேண்டிய படம் ஆனால் பங்கம் இல்லாமல் படம் ஆக்கி இருக்கிறார்கள்.

