படம்: கூகுல் குட்டப்பா
நடிப்பு: கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா மேனன், மாரிமுத்து, யோகி பாபு, மனோபாலா, சி.ரங்கநாதன், பிராங்க் ஸ்டார் ராகுல், பூவையார், சுஷ்மிதா
தயாரிப்பு: கே.எஸ்.ரவிகுமார்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: அர்வி
இயக்கம்: சபரி – சரவணன்
பி.ஆர்.ஒ: யுவராஜ்
சொந்த ஊரில் வயதான நிலையில் மகன் ஆதியுடன் ( தர்ஷன்) வசிக்கும் சுப்ரமணி (கே.எஸ்.ரவிகுமார்) தோட்ட வேலை, விவசாயம் செய்து வாழ்கிறார். உயர் படிப்பு படித்த ஆதிக்கு ஜெர்மனி நாட்டில் வேலை கிடைக்கிறது. ஆனால் மகனை வெளிநாடு செல்ல வேண்டாம் தன்னுடனே இருக்கும்படி வற்புறுத்து கிறார். ஆனால் ஆதி, தந்தையை சமாதானம் செய்வதுடன் தனியாக இருக்கும் அவரை கவனித்துக்கொள்ள ஆயாவை ஏற்பாடு செய்து விட்டுச் செல்கி றார். இரண்டு நாளிலேயே அந்த ஆயாவை விரட்டியடிக்கிறார் சுப்ரமணி. இதையறிந்த மகன் தனது தந்தைக்கு உதவியாக இருக்க ரோபோ எந்திரத்தை கொண்டுவந்து தருகிறார். முதலில் அதை ஏற்க மறுக்கும் சுப்ரமணி அது செய்யும் பணிவிடைகளை பார்த்து ஏற்றுக்கொள்கிறார். தனது இன்னொரு மகன்போல் அதன் மீது பாசம் காட்டுகி றார். ரோபோவும் அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறது. ஒருகட்டத்தில் மகன் இல்லாவிட்டலும் பரவாயில்லை ரோபோ மட்டும்போதும் என்றநிலைக்கு வருகிறார் சுப்ரமணி. அவரிடமிருந்து ரோபோவை பிரிக்க முடியாத சூழல் எழுகிறது. ரோபோவால் எந்த நேரத்திலும் தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற விவரம் அறிந்ததும் அதை தந்தையிடமிருந்து பிரிக்க முயல்கிறான் ஆதி. தன்னை கொன்றாலும் பரவாயில்லை ரோபோவை பிரியமாட்டேன் என்கிறார் தந்தை. இறுதியில் சுப்ரமணி ரோபோவை பிரிந்தாரா இல்லையா என்பதற்கு கிளைமாள்ஸ் பதில் அளிக்கிறது.
ரோபோவை வைத்து ஏற்கனவே ஒரு சில படங்கள் வந்து கவர்ந்திருக்கிறது. கூகுல் குட்டப்பா அதிலிருந்து மாறுபட்டு ஒரு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள இணை பிரியாத பந்தம்போல் கே.எஸ்.ரவி குமாருக்கும், ரோபோவுக்கும் உள்ள அளவுகடந்த பாசத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என பிரபலங்களை இயக்கிய கே.எஸ்.ரவி குமார் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
வெறுமனே ஒரு பனியன், வேட்டி அணிந்துக்கொண்டு கொஞ்சம் சாய்ந்த நடையுடன் எதார்த்தமான ஒரு முதியவ ராகவே வாழ்ந்திருக்கிறார் கே.எஸ். ரவிகுமார்.
எந்திர மனிதனை உதவிக்காக மகன் தந்துவிட்டு சென்றதும் அதன் மீது கோபப்பட்டு சுவிட்ச் ஆப் செய்து தோட்டத்தில் கோணியில்போட்டு மூடிவைப்பதும் பின்னர் அது தானாக ஆன் ஆகி காபி போட்டு எடுத்து வர அந்த காபியை வாங்கி வெளியில் ஊற்றுவது மாக வெறுப்புணர்வை வெளிக் காட்டும் ரவிகுமார் ஒரு சில நாட்களுக்கு பிறகு ரோபோ இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றளவுக்கு பாசத்தை பொழியத் தொடங்கியதும் கதையில் பல சுவரஸ்யங்கள் தொடங்குகின்றன.

கார்ப்பரேஷன் அதிகாரி மாரிமுத்து ரோபோவுக்கு லைசென்ஸ் இல்லை என்று அதை துக்கிக்கொண்டு சென்று தனி அறையில் பூட்டி வைப்பதும் அதைக் கண்டு ரவிகுமார் சிறுகுழந்தைபோல் அழுது புலம்பி அங்கிருந்து மீட்டு செல்ல வாதாடுவதும் உருக்கம்.
உனக்கு நேரமே சரியில்லை என்று சொல்லி ரோபோவை ஜோதிடரிடம் அழைத்துச் செல்லும் ரவிகுமார் அதற்கு ஜோதிடம் பார்த்து பரிகார பூஜை செய்ய முடிவு செய்வது கல கல.
திடீரென ரோபோவின் கைகளை லாஸ்லியா துண்டிப்பதை கண்டு ரவிகுமார் கதறுவது திடுக்கிட வைக் கிறது.
ரவிகுமார், பவித்ரா இருவரும் முதிர் காதல் பகிர்ந்து ரசிகர்களை ரிலாக்ஸக்குகின்றனர்..
ரவிகுமாரின் மகனாக தர்ஷன் அளவுடன் நடித்துள்ளார். லாஸ்லியா ஈழத் தமிழ் பேசி கவனத்தை ஈர்க்கிறார்.
யோகிபாபு ரவிகுமாரின் மச்சானாக வந்து சிரிபூட்டுகிறார். அதேபோல் குட்டப்பா என்ற பேரை கேட்டாலே பைத்தியம். பிடித்தவர்போல் ஆகிவிடும் பிராங்க் ஸ்டார் ராகுல் ரோபோவுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார் படத்தை தயாரித்திருக்கிறார்.
சபரி- சரவணன் இரட்டையர்கள் படத்தை ரசனை குறையாமல் இயக்கியுள்ளனர்.
ஜிப்ரான் இசை எல்லைக்கோட்டுக்குள் ஒலிக்கிறது.
அர்வியின் ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவு தெளிந்த நீரோடை.
கூகுல் குட்டப்பா- உணர்வு
பூர்வாக உருவாகி இருக்கும் எந்திர மனிதன் கதை.

