படம்: காதல் என்பது பொதுவுடமை
நடிப்பு: லிஜோமோல், வினித்,.ரோகிணி,
கலேஷ், தீபா ,அனுஷா,
தயாரிப்பு: ஜோ பேபி
இசை :
கண்ணன் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்
இயக்கம்-: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
வெளியீடு: BOFTA ஜி. தனஞ்ஜெயன்
பிஆர்ஒ: குணா
சாம் (லிஜோமோல்) தன் தாயிடம் (ரோகிணி) தான் ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். நீ அவரை வீட்டுக்கு அழைத்து வா விருந்து சாப்பிட்ட பிறகு ஒ கே சொல்கிறேன் என்கிறார். சாமின் காதலரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் தாய். காரணம் சாம் தன் காதலர் என்று காட்டியது நந்தினி (அனுஷா) என்ற பெண்ணை. இதனால் குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது
ஆனாலும் நந்தினியை விட்டு பிரியமாட்டேன் என்கிறார் சாம். அடுத்து நடப்பது என்ன என்பதை பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி விடை அளிக்கிறது கிளைமாக்ஸ்.
நீண்ட வருடங்களுக்கு முன்பு.லெஸ்பியன் அதாவது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவை விளக்கும் படமாக இந்தியில் நந்திதா தாஸ் , சப்னா ஆஷ்மி நடித்த பயர் என்ற படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு தொட்டும் தொடாமல் சில.படங்கள் வந்தாலும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதலை சொல்லும் படமாக வந்திருக்கிறது காதல் என்பது பொதுவுடமை.
பயர் பாணியில் இல்லாமல் ரொம்பவும் நாசுக்காக ஆபாச கலப்பில்லாமல் இப்படத்தில் காட்சிகளை படமாக்கி இருப்பது யார் முகத்தையும் சுழிக்க வைக்காது.
ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்த லிஜோ மோல் இப்படத்தில் ஏற்றிருக்கும் லெஸ்பியன் வேடம் பலருக்கும் அதிர்ச்சி தரும்.
தான் அனுஷாவை காதலிப்பதாக தாய் ரோகிணி, தந்தை வினித்திடம் வார்த்தை போர் நடத்தும் லிஜோ மோல் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசும்போது, “ஏன் இவர் இப்படி ஆகிவிட்டார் ” என்று தோன்றுகிறது.
ஆனால் லிஜோ மோல், அனுஷா, வினித், ரோகிணி ஆகியோரிடையே மொட்டை மாடியில் நடக்கும் அந்த வாக்கு வாதம் ஒரு பட்டி மன்றமாகவே மாறியிருக்கிறது.
பெண்ணும் பெண்ணும் காதலித்து ஒன்றாக வாழ்வதென்பது இயற்கைக்கு விரோதமான போக்கு, அப்படி எல்லா பெண்களும் நினைத்தால் உலகில் குழந்தை பிறப்பே இல்லாமல் ஆகிவிடுமே என்று வினித் கேட்கும்போது அதற்கு லிஜோ அளிக்கும் பதில் சரியாக இருந்தாலும் ஏற்க மனம் தயங்குகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று நிலையில் இந்த பெண்கள் ஏன் தத்தெடுக்க வேண்டும்? அந்த குழந்தையை பெற்று கொடுக்கவும இன்னொரு ஆண் – பெண் ஜோடி இணைந்தால்தானே நடக்கும் என்பதை சொல்ல ஏன் இயக்குனர் மறந்தார் என்று தெரியவில்லை
பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே யான காதல் பற்றி இயக்குனர் கிளைமாக்சில் சொல்லும் பதில் எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்குமோ? ஆனால் இப்படியும் ஒரு சமுதாயம் நம் அக்கம் பக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற உண்மையை போல்டாக சொல்லி இருப்பது துணிச்சலான.முயற்சி.
துணை பாத்திரங்கள் தீபா, கலேஷ் காமெடிக்கு பயன்பட்டிருக்கின்றனர்.
ஜோ பேபி தயாரித்திருக்கிறார்.
கண்ணன் நாராயணன் இசை காதல் ராகத்தை காதோரம் உரசிச் செல்கிறது.
ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு ஒளிவு மறைவு இல்லாமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தான் ஒரு மாறுபட்ட படைப்பாளி என்பதை உறுதிபடுத்தியிருக் கிறார்.
காதல் என்பது பொதுவுடமை – சில சமயம் உண்மை கசக்கும்.

