படம்: குட் பேட் அக்லி
நடிப்பு: அஜித் குமார், திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராப், பிரசன்னா, பிரபு, கார்த்திகேயன்
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இசை : ஜீ.வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்
இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
ஏகே (அஜித் குமார் ) சர்வதேச அளவில் பிரபலமான கேங்ஸ்டர். பழைய பகை ஒன்றில் ஏ கேவின் மகனை ஒரு கேங்ஸ்டர் கூட்டம் கடத்துகிறது. பின்னர் அவனை போதை மருந்து வழக்கில் சிறையில் அடைக்கிறது. சிறையில் அடைபட்ட மகனை மீட்டு கொண்டுவர சபதம் செய்யும் ஏகே தன் மகனை கடத்திய கூட்டத்தை கண்டுபிடித்து எவ்வாறு துவம்சம் செய்கிறார். இறுதியில் மகனை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
கதை என்னமோ மிகவும் சிம்பிள். ஆனால் காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் கடினம். கேங்ஸ்டராக ஏற்கனவே பில்லா படத்தில் அஜித் நடித்து பார்த்திருக்கிறோம் ஆனால் அதிலிருந்து பத்து மடங்கு அதிகம் பவர்ஃபுல் கதாபாத்திர மாக இதில் ஏகே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஜீத்.
அஜீத்தை எப்படி எல்லாம் ரசிகர்கள் பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும், கும்மாளம் போட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், நடனம் ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தார்களோ அப்படியெல்லாம் அஜீத்தை ஆட்டிவித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் .
அஜீத்தும் எந்த கண்டிஷனும் போடாமல் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்து ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைய
வைத்திருக்கிறார்.
அஜீத் துப்பாக்கி எடுத்தால் குறைந்தது 20 லிருந்து 50 பேராவது சுட்டு தள்ளப்படுகி றார்கள். இதற்கு லாஜிக் மேஜிக் எதுவும் பார்க்க கூடாது ஏனென்றால் அவர் கையில் இருப்பது ஏகே 47 மட்டுமல்ல அதற்கும் மேலாக குண்டுமழை பொழியும் மிஷின் துப்பாக்கிகள்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதுவும் இரட்டை வேடம். ஒருவேடம் என்றாலே தனது குரலை வைத்து மிரட்டுவார், இதில் போதக்குறைக்கு இரட்டை வேடம்.. மிரட்டலோ மிரட்டல்..
அஜீத் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். அஜீத்தின் எக்ஸ் காதலியாக சிம்ரன் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தில் செண்டிமெண்ட், சோகம், காமெடி என்று எதையும் எதிர்பார்க்கக் கூடாது முழுக்க முழுக்க 100க்கு 120% ஆக்ஷனோ ஆக்ஷன்தான்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர தல அஜீத் ரசிகர் என்பதை சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் கேமராவை தீ பிழம்பு நடுவே சுழல விட்டிருக்கிறார்.
இசை ஜிவி பிரகாஷ். ஆனாலும் இது மண்டை பிளக்கும் இசை.. கொஞ்சம் சவுண்டை குறைத்தால் தான் காது ஜவ்வு காப்பாற்றப்படும்.
பழைய பாடல்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். புதிதாக ஒன்றிரண்டு பாடல்களும் இணைத்திருக்கிறார்.
சினிமா பார்க்க வந்தோமா. அஜீத் சூப்பராக ஆக்சன் காட்சியில் நடித்தாரா.. என்று பார்த்துவிட்டு கப்சிப் என்று நகர்ந்தால்தான் படம் இயக்கியவருக்கு கிரிடிட் கிடைக்கும்.
குட் பேட் அக்லி – முழுக்க முழுக்க ரசிகர்கள் படம்.