இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூச்சுத்திணறல் காரணமாக நேற்று(டிசம்பர் 26ம் தேதி) இரவு 8 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் காலமானார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மன்மோகன் சிங் மறைவு காரணமாக மத்திய அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எந்தவித அரசு விழாக்கள் நடைபெறாது. மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. பொதுவாக முன்னாள் பிரதமர்கள் மறைந்தால், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும், அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இந் நிலையில் மன்மோகன் சிங் உடலுக்கு நாளை 28ம் தேதி இறுதிச்சடங்கு நடக்கும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது;
மன்மோகன் சிங்கின் உடல் நாளை காலை 8 மணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு 8.30 முதல் 9.30 வரை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அதன் பிறகு காலை 9.30 மணி அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும். என்றார்.
இந்நிலையில், டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, மேலும் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ ராசா, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.