படம்: அரண்மனை 3
நடிப்பு: ஆர்யா, சுந்தர். சி, விவேக், யோகிபாபு, மனோபாலா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், வேல ராமமூர்த்தி, சம்பத், மதுசூதனராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாதன், பேபி ஒவி பஹண்டர்கர், நளினி, மைனா நந்தினி, ஹரிஹரன், சங்கர் மஹாதேவன்
தயாரிப்பு: அவினி சினிமாஸ், பென்ஸ் மீடியா,
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார்
இசை: சத்யா.சி
இயக்கம்: சுந்தர் சி.
பி.ஆர்.ஓ: ரியாஸ் அஹமத், சதீஸ் (AIM)
வானுயர்ந்த அரண்மனையில் ஜமீன்தாரின் மகள் கண்ணுக்கு ஒரு பேய் தெரிகிறது. தன்னை பேய் பயமுறுத்துவதாக சொல்வதை கேட்டு எரிச்சல் அடையும் ஜமீன்தார் சம்பத் குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார். வருடங்கள் உருண்டோடுகிறது. ஜமீன்தாரின் கார் டிரைவர் பேயால் கொல்லப்படுகிறான். சிறுவயதுமுதல் தூக்கி வளர்த்த டிரைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் ஹாஸ்டலில் சிறுவயதில் தங்கச் சென்ற ராசி கண்ணா. இதற்கிடையில் அம்மன் கோவில் கருவறைக்கு பின்னால் ஆண்டுக்கணக்கில் பூட்டிக்கிடக்கும் அறையை திறக்க கோர்ட் உத்தரவிடுகிறது. அந்த அறையில் அடைபட்டு கிடந்த பேய் ஆக்ரோஷம் அடைந்து ஜமீனில் உள்ள இன்னும் சிலரை கொல்கிறது. இந்நிலையில் அந்த அரண்மனைக்கு தன் மகளை பார்க்க வருகிறார் சுந்தர்.சி. அப்போது அங்கு பேய் இருக்கும் விவரம் அவருக்கு தெரிய வருகிறது. அரண்மனையில் ஆண்ட்ரியா பேயாக சுற்றுவதற்கும் ஒவ்வொருவரை யாக பழிவாங்குவதற்கும் என்ன காரணம் என்பதையும், ஆக்ரோஷம் அடைந்த அந்த பேயை எப்படி அழிக்கிறார்கள் என்பதை யும் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
சுந்தர்.சி இயககத்தில் ஏற்கனவே அரண்மனை 1, அரண்மனை2 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த வரிசையில் அந்த இரண்டு படங்களையும் மிஞ்சும் விதமாக பிரமாண்ட காட்சிகளுடன் அரண்மனை 3 உருவாகி இருக்கிறது.
பேயின் சித்து விளையாட்டுக்கள் படத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கி விடுகிறது. தானாக ஒரு கை மட்டும் பந்தை தரையில் தட்டிவிட்டுக்கொண்டு வந்து குழந்தையை பயமுறுத்தும்போதே அரங்கில் கூக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விடுகின்றன.
ஹாஸ்டலுக்கு படிக்கச் சென்ற ராசி கண்ணா பல வருடங்களுக்கு பிறகு திரும்பி அரண்மனைக்கு வந்ததும்பேயின் ஆட்டம் அதிகரித்துவிடுகிறது. சிறுவயது முதல் ராசி கண்ணா மீது காதல் காட்டும் ஆர்யா வந்ததும் பேயின் கொட்டத்தை அடக்கிவிடுவார் என்று ஆறுதல் கிடைக்கிறது. ஆனால் ஆர்யா தான் பேய் என்று ஒரு கட்டத்தில் தெரியும்போது அதிர்ச்சியில் உடல் ஜில்லிடுகிறது.
ஒரேபேய்தான் எல்லாரையும் பயமுறுத்தி ஆட்டிப்படைக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் கூடவே இன்னொரு பேயும் அங்கிருப்பது தெரிய வரும்போது கதை மேலும் சூடுபிடிக்கிறது.
ஆர்யா உடம்பில் பேய் இருப்பது தெரியாமல் அவரை சீண்டிப்பார்க்கும் யோகிபாபு, விவேக், மனோபாலா அவரிடம் அடிவாங்கி திணறுவது பேய் காமெடி.
திடீர் திடீரென்று ஆர்யா காணாமல் போனாலும் சரியான நேரத்துக்கு வந்து கதைக்கு கைகொடுக்கிறார்.
ராசி கண்ணா கிளாமருக்கு கிளாமர் காட்டி நடிப்புக்கு நடிப்பும் காட்டி பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். நளினியின் டிக்டாக் அலம்பல் ரசிக்க வைக்கிறது. ஆண்ட்ரியாவின் பேய் கோபம் காட்சிகளை உரமேற்றுகிறது.
மறைந்த விவேக்கை மீண்டும் திரையில் பார்க்கும்போது அவரது காமெடி பங்கினை திரையுலகம் இழந்துவிட்டதை எண்ணி மனம் கலங்குகிறது.
படத்தின் கிளைமாக்ஸில் காட்சியின் பிரமாண்டம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாகி இருக்கிறது. குகையின் மேற் சுவரை முட்டும் உயரமான அம்மன் சிலை அருகே அவரது சிம்ம வாகனம் அரங்கு பிரமிப்பு. கிளைமாக்ஸில் சிம்ம வாகனம் உயிர் பெற்று எழுத்து துஷ்ட சக்திகளை அழிப்பது அட்டகாசம் முன்னதாக ஹரிஹரனும் சங்கர் மஹாதேவனும் இணைந்து பாடும் அந்த பக்தி பாடல் அரங்கில் அருள் வந்து ஆடவைக்கும்.
சுந்தர்.சி. அரண்மனை3 படத்தை 2பாகத்துக்கு பிறகு இடைவெளிக்குபிறகு இயக்கி இருப்பதற்கு படத்தின் வித்தியா சமான காட்சிகள் பதில் சொல்கிறது.
யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவும், சி.சத்யாவின் அதிரடி இசையும் காட்சிகளுக்கு மெருகூட்டுகிறது.
அவினி சினிமாஸ், பென்ஸ் மீடியா, படத்தை தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ வின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை ரிலீஸ் செய்துள்ளது
அரண்மனை 3 – திகில் காமெடி பக்தி.