வில்லன் வேடத்திற்கு அர்ஜுன் தாஸ் குட் பை சொல்லி இருக்கிறார் இனி அவரது பயணம் இப்படிதான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அது பற்றி விவரம்….
கைதி, குட் பேட் அக்லி, விக்ரம், மாஸ்டர், அநீதி என பல்வேறு படங்களில் வில்லனாக, கதை நாயகனாக நடித்திருப்பவர் வளர்ந்து வரும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ். பாம் படத்துக்கு பிறகு அவர் வளர்ந்த நடிகர் ஆகி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
பாம் படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். பிரதான
வேடத்தில் காளி வெங்கட் நடித்துள்ளார். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார்.
பாம் படம் திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்து வெற்றி நாட்களை கூடுதலாக்கிக்கொண்டு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்றதும் அவர் ஏதோ பாம் வைத்து வில்லன்களின் கூடாரத்தை தகர்க்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருப்பார் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றால் அதில் அர்ஜுன் தாசின் கதாபாத்திரம் தான் இருப்பதிலேயே பயந்த சுபாவம் கொண்ட பணிவான கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருக்கிறார். இதுவரை அர்ஜுன் தாஸிடம் காணாத நடிப்பை இப்படத்தில் பார்த்தபோது உண்மையிலேயே அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.

கரடு முரடான பயமுறுத்தக் கூடிய குரல் கொண்ட அர்ஜுன் தாஸ் இப்படி கூட நடிப்பாரா, அவரால் இப்படி கூட வசனம் பேச முடியுமா என்று சீனுக்கு சீன் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதையெல்லாம் தியேட்டரில் படம் பார்க்கும்போது ரசிகர்கள் அவர் வரும் காட்சிகளிலும், வசனம் பேசும்போதும், ஆக்சன் காட்சியில் நடிக்கும் போதும் தரும் வரவேற்பிலிருந்து உணர முடிகிறது.
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸிடம் இப்படி ஒரு ஹீரோ மெட்டீரியல் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
*நீங்கள் வில்லனா, ஹீரோவா?” என்று அர்ஜுன் தாஸிடம் கேட்டபோது மனம் திறந்து பேசினார்.
அர்ஜுன் தாஸ் கூறியதாவது:
திரை உலகில் என்னை கைதி படத்தில் அறிமுகப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நான் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். கைதி படத்திற்கு பிறகு எனக்கு வில்லன் வேடங்கள் பல படங்களில் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆனால் வில்லனாகவே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசையும் இல்லை, இலட்சியமும் இல்லை அந்த வட்டத்திலிருந்து வெளிவந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எண்ணமாக இருக்கிறது.
வில்லன் வேடத்திற்கு வரும் படங்களில் நடிப்பதை விட சமுதாய நோக்கம், அரசியல் சட்டையர், காதல் கதை போன்ற வெவ்வேறு கதை அம்சமும் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
பாம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். பயந்த சுபாவம் உள்ள தாழ்த்தப்பட்ட இளைஞனாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறதா என்று கேட்கிறார்கள் அதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த படத்தில் டைரக்டர் விஷால் வெங்கட் தவிர எல்லோரும் என்னை அடித்திருக்கிறார்கள், நான் அடி வாங்கி இருக்கிறேன். பதிலுக்கு அடிக்கிறேனா என்பது சஸ்பென்ஸ்.
மணி என்ற பாம் பட கதாபாத்திரம் எனக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட இமேஜ் உருவாக்கி அளித்திருக்கிறது. நகரத்து இளைஞனாக, வில்லனாக மட்டுமே நடிக்க முடியும் என்ற ஒரு தோற்றம் பாம் பட கதாபாத்திரம் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் அர்ஜுன் தாசால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.   அந்த நம்பிக்கை இயக்குனர் விஷால் வெங்கட்டுக்கும் வந்து என்னை அழைத்து பாம் படத்தில் நடிக்க வைத்த நிலையில் இனி மாற்ற இயக்குனர்களுக்கும் அந்த நம்பிக்கை நிச்சயம் வரும். இந்த படத்துக்கு பிறகு எனக்கு நிறைய கிராமத்து பின்னணியில் அமைந்த கதாபாத்திரங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

நல்ல கதை அம்சம், நடிப்பை வெளிப்படுத்த கூடிய பாத்திரம் என்றால் நிச்சயம் அதை ஏற்று
நடிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த தொழில் நடிப்பு. எனக்கு பிடித்த தொழில் செய்வதற்கு எனக்கு சம்பளமும் கொடுத்து, எனக்காக ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்கும் தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு மட்டுமல்லாமல் அர்ஜுன் தாஸ் நன்றாக நடிப்பான் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும் என்றைக்கும் நான் உண்மையாக இருப்பேன். நான் பேசுவதில் உண்மை இருந்தால்தான் அதை மற்றவர்கள் நம்புவார்கள். நான் பேசுவதில் பொய்யோ வேஷமோ இருந்தால் அதை நிச்சயம் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் ஏனென்றால் அவர்கள் எல்லோரையும் விட புத்திசாலிகள். அவர்களின் ஆதரவு என்னை புது நம்பிக்கையுடன் திரை உலகில் நடை போட வைத்திருக்கிறது.
இப்போதைக்கு நான் வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நான் நடித்தேன் என்றால் அது அஜீத் சாருக்காகத் தான். இப்படி சில சூழல்கள் விதிவிலக்கு.
இன்னொரு விஷயத்தை நான் இங்கு சொல்ல வேண்டும் நான் நன்றாக நடிக்கிறேனா இல்லையா என்பதை என் முகத்துக்கு நேராக சொல்லக்கூடிய உண்மையான விமர்சகர்கள் என் வீட்டில் இருக்கிறார்கள். என் தாய் தந்தை, சகோதரி ஆகியோர் நான் நன்றாக நடித்திருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள், இல்லாவிட்டால் சரியாக நடிக்கவில்லை, இன்னும் கூட நன்றாக நடத்திருக்கலாம் என்று முகத்துக்கு நேராக கூறி விடுவார்கள். நான் ஆரம்ப காலகட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு படிப்படியாக இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். என்னை இத்தனை காலம் பொறுத்துக் கொண்ட ஆதரித்த என் குடும்பத்தினருக்கு நான் நன்றி சொல்கிறேன். ஏதோ படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறான், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த சந்தோஷத்தை நான் அனைவருக்கும் வழங்கவே விரும்புகிறேன்.
எல்லோரின் ஆதரவும், ரசிகர்களின் ஊக்கமும் எனக்கு தேவை. அதுவே
என்னை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அர்ஜுன் தாஸ் கூறினார்
Article By
Jayachandhiran. k.
Trendingcinemasnow.com

