ரஜினி கமல், விஜய் அஜீத் படங்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் தேவா இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா,
கடந்த 1989ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகாராசா’ படம் மூலம் இசை அமைப்பாளராக தேவா அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் என இருவரும் இசையமைப்பாளர்களே ராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்த நிலையில் தேவாவின் பாடல்களுக்கும் தனித்த ரசிகர் பட்டாளம் உருவானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, கமல்ஹாசன் நடித்த பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, அஜித் நடித்த வாலி, விஜய் நடித்த தேவா போன்ற படங்களுக்கும் மற்றும் அனைத்து முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கும் தேவா இசையமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு இசையமைப்பாளரருக்கும் ஒரு பாணி இருப்பது போல் தேவா பக்கம் மெலடி குத்துப்பாட்டு பாடல்களுக்கு இசையமைத்தாலும் கானா பாடலுக்கு பெயர் பெற்றவர் தேவா. இன்னும் சொல்லப்போனால் கானா பாடல்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பாடல்களைக் கடந்து தேவாவின் பக்திப் பாடல்களும் கச்சேரிகளில் பிரபலமானவை.
இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கூறியது :
தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவர பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும். பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர் உச்ச நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

பாஜக மாநிலத் தலைவர்யினார் நாகேந்திரன்:
தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர் தேவா. அவரது இசை, தலைமுறைகள் பல கடந்தும் நம் நினைவுகளிலும் இதயங்களிலும் உயிர்ப்புடன் வாழும்.
வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை : தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் :
கிராமப்புறங்களில் வாழும் விளிம்பு நிலை மக்களின் இசையை இளையராஜா பொது நீரோட்டத்துக்குக் கொண்டு வந்தது போல நகர்ப்புற விளிம்பு நிலை மக்களின் இசையைப் பொது நீரோட்டத்துக்குக் கொண்டு வந்தவர் தேவா. அவரது மறைவு தமிழ்த் திரையுலக இசைக்குப் பேரிழப்பு. அவருக்கு என் அஞ்சலி
நடிகர் விஜய் சேதுபதி:
தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் : தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப் பெரியது. எளிய பின்னணியில் இருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர்.
