Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அன்பில் அவன் (பட விமர்சனம்)

படம்: அன்பில் அவன்

நடிப்பு: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத், ரேவதி

தயாரிப்பு : கே.கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன்

இயக்கம்: ஆர் கார்த்திகேயன்

பி ஆர் ஓ : யுவராஜ்

கதை: சூர்யா (அசோக்செல்வன் ), இயல் ( ப்ரீத்தி முகுந்தன் ) காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனால் குடும்ப உறவுகள் இல்லாமல் தனிமையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு மலைப் பிரதேச பகுதியில் வீடு போன்ற விடுதி கட்டி அதில் தங்கும் ஏற்பாடு செய்து கொடுத்து வியாபாரம் நடந்த திட்டமிடுகின்றனர். அதற்காக மலைப் பிரதேசத்தில் அழகிய வீட்டை கடன் வாங்கி வாங்குகின்றனர். ஆனால் அந்த ஊர் எம் எல் ஏ அந்த வீட்டை தனக்கு சொந்தமாக்க எண்ணுகிறார். பல்வேறு சூழ்ச்சிகள் செய்து சூர்யாவையும்,  இயலையும் வாட்டி வதைத்து வீட்டை எழுதி வாங்க முற்படுகிறார். அந்த கொலைகார கூட்டத்திடம் சிக்கிய இளம் ஜோடிகளின் கதி என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

அசோக் செல்வன் படமென்றாலே மென்மையான  காதல், புத்திசாலித்தனமான  திரைக்கதை நகர்வு போன்ற படங்களை  எதிர்பார்ப்பது வழக்கம். அன்பில் அவன் என்ற டைட்டிலை பார்க்கும்போது இது ஒரு காதல் கதை என்பதை யூகித்து விடுவார்கள் ஆனால் அதையும் மீறிய ஒரு ஆக்சன் அதிரடி இந்த படத்தில் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த  சம்பவங்கள் தான் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடுகிறது.

தொடக்க காட்சிகளில் அசோக் செல்வன், பிரீத்தி  ஜோடியின் வாழ்க்கை நிகழ்வு  யதார்த்தமான ஸ்டார் ஓட்டல் பணியாளர்களாக தொடங்கும் போது இந்த கதை இப்படித்தான் நகரப் போகிறது என்று எண்ண வைத்து திடீரென்று மலைப்பகுதிக்கு அசோச்செல்வன், பிரீத்தி முகுந்தன் காரில் புறப்பட்டதும்  கதையே அதற்கு பிறகுதான் ஆரம்பிக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை. இப்படி கூட நடக்குமா என்று அதிர்ச்சி தரும் அளவுக்கு இவர்களின் வாழ்க்கை திசை மாறிப் போகும்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்  எம் எல் ஏ, இன்ஸ்பெக்டர், வக்கீல், ரவுடியிசம் எல்லாமே கதையை ஆக்சன் களத்துக்கு கொண்டு செல்கிறது.
இதுவரை காதல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த அசோக் செல்வன் இதில் ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கிறார் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டினாலும் அதற்கேற்ற உடற்கட்டை அவர் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது.

பிரீத்தி முகுந்தன் காதல் மனைவியாக அழகான ஒரு வாழ்வியல் வாழ்ந்திருக்கிறார். அசோக்செல்வனுக்கும் ப்ரீத்திக்கும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் நடக்கும் வார்த்தை போர் திடுக்கிட வைக்கிறது.
எம்.எல்.ஏ. ராஜநாயகமாக வரும் கதிர் பாலு, இன்ஸ்பெக்டர் தவசியாக வரும் மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக வரும்
சாபுமோன் அப்துசமத்  காட்டும் வில்லத்தனம் காட்சிகளை பதட்டத்துக்குள்ளாக்குகிறது.

படத்தை கே.கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் தயாரித்திருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்க தூண்டுகிறது.
கண்ணாடிபோல் பளபளக்கும் அற்புதமான ஒளிப்பதிவு கௌதம் ராஜேந்திரன் செய்திருக்கிறார்

அசோக் செல்வனை இப்படி ஒரு ஆக்சன் கதைக்கு இயக்குனர் ஆர் கார்த்திகேயன் எந்த தயக்கமும் காட்டாமல் பயன்படுத்தியிருப்பது அதற்கு எந்தவித பங்கமும் வந்துவிடாமல் அசோக் செல்வன் தனது பங்களிப்பை செய்திருப்பது இரண்டுமே வெற்றிக்கு வழி வகுக்கிறது.
அதே சமயம் ஆக்சன் காட்சிகளில் குத்து, வெட்டு, துப்பாக்கி சூடு, கொலை என ஏகத்துக்கு நடந்தாலும் அதை ஒரு போலீஸ் வழக்காகவாவது பதிவு செய்து கிளைமாக்சை முடித்திருந்தால் படம் முழுமை அடைந்திருக்கும்

அன்பில் அவன் – அசோக் செல்வனின் ஆக்ஷன் அவதாரம்.

Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com

Related posts

ரஜினியின் கூலி விநியோக உரிமை பெற்ற மலேசிய நிறுவனம்

Jai Chandran

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

Jai Chandran

ஜிகிரி தோஸ்த் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend