படம்: மார்க்
நடிப்பு: கிச்சா சுதீப், யோகி பாபு, விக்ராந்த், நவீன் சந்திரா. குரு சோமசுந்தரம் மற்றும் பலர்
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்
இசை: அஜனீஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா
இயக்கம்: விஜய் கார்த்திகேயா
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா ( D ‘One)
ரவுடி ராஜ்ஜியம் நடத்தும் பத்ரா (நவீன் சந்திரா) யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசினால் சுட்டு தள்ளுகிறான். இவரது தம்பி ருத்ரா (விக்ராந்த்) ஒரு பெண்ணுடன் ஓடி விடுகிறான். இதையறிந்து கோபம் அடையும் பத்ரா, ருத்ராவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவனைத் தேடி அலைகிறான். பத்ராவிடமிருந்து தப்பிக்க குழந்தைகளை கடத்தி அதன் மூலம் பணம் பெற்று காதலியுடன் வெளிநாடு தப்பிக்க முடிவு செய்கிறான் ருத்ரா. இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்காக களம் இறங்குகிறார் சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி மார்க் (கிச்சா சுதீப்). அவரிடமிருக்கும் முக்கிய வீடியோ ஆதாரத்தை கைப்பற்ற முதலமைச்சராக பதவியேற்கும் அரசியல்வாதி தனது போலீஸ் படையை அனுப்புகிறார். இந்த இடியாப்ப சிக்கலில் கிளைமாக்ஸ் என்னவாகிறது என்பதை ஆக்சன் திருப்பத்துடன் மார்க் பதில் அளிக்கிறது.
கிச்சா சுதீப் தமிழில் சில படங்களில் வில்லன் வேடங்களில் நடித்திருந்தாலும் கன்னடத்தில் தற்போதைக்கு அவர் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் மார்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் ஆக்சன் அதிரிபுதிரி செய்திருக்கிறார். தொடக்க காட்சியிலேயே போலீஸ் நிலையத்தில் ரவுடி கூட்டத்தை தெறிக்க விடும் காட்சியில் விசில் பறக்க வைக்கிறார் கிச்சா சுதீப்.
கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்காக அந்த குழந்தைகள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து மீட்கவும், அதற்காக அவர் ரவுடிகளிடம் தடாலடி ஆக்சனில் இறங்குவதற்குமே கிளைமாக்ஸ் நெருங்கி விடுகிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் தண்ணீரில் மூழ்கவிருக்கும் குழந்தைகளை முதுகில் சுமந்து கிச்சா சுதீப் காப்பாற்றும் காட்சி பரபரப்பு. கழுத்தளவு தண்ணீரில் மூச்சு முட்டினாலும் கடினமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கிச்சா சுதீப்.
விக்ராந்த் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன் வாய்ப்பை தயங்காமல் தொடர்ந்து ஏற்றால் நல்லதொரு இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
பத்ரவாக நடித்திருக்கும் நவீன் சந்திரா ஓவர் கூச்சல் போட்டாலும் கிளைமாக்ஸ்சில் கிச்சா சுதீப்புடன் பரபரப்பாக மோதி இருக்கிறார்.
குரு சோமசுந்தரம் காமெடி வில்லனாக நடிக்க யோகி பாபு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
அஜனீஸ் லோக்நாத் இசை ஓவராக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு துணை நிற்கிறது. அதேபோல் சேகர் சந்திராவின் கேமராவும் ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்ற மூடை அளிக்கிறது
இயக்குனர் விஜய் கார்த்திகேயா ஒரு தடால்டி ஆக்சன் படத்தை வழங்க முயன்று வெற்றி பெற்று இருக்கிறார்.
மார்க் – கிச்சா சுதீப்பின் ஆக்சன் அதிரிபுதிரி.

Review By
K.Jayachandhiran
www. trendingcinemas now. com
