படம்: மருதம்
நடிப்பு: விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா
தயாரிப்பு: சி வெங்கடேசன்
இசை: என் ஆர் ரகுநாதன்
ஒளிப்பதிவு: அருள் கே சோமசுந்தரம்
இயக்கம்: வி கஜேந்திரன்
பிஆர்ஓ: A.ராஜா
கல்புதூர் கிராம சிறு விவசாயி கன்னியப்பன். அவர் நிலத்தை வங்கி அதிகாரி ஒருவர் மோசடி செய்து ஏலத்துக்கு விடுகிறார். இந்த விவரம் கன்னியப்பனுக்கு தெரிய வர அதை மீட்க வங்கிக்கு சென்று தட்டிக் கேட்கிறார். பதில் கிடைக்கவில்லை. பிறகு சட்டப் போராட்டம் நடத்துகிறார். இதில் அவரால் வெல்ல முடிந்ததா என்பதற்கு சட்ட நுணுக்கமான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
கன்னியப்பன் கதாபாத்திரத்தில் தொடக்க காட்சிகளில் குடும்பஸ்தனாக எதார்த்த நடிப்பை வெளியிடும் விதார்த் தனது நிலம் பறிபோனது தெரிந்தவுடன் நேரடியாக வங்கிக்கு சென்று அங்குள்ளோரை தாக்கி நியாயம் கேட்பது சராசரி ஒரு விவசாயின் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜ் திரை உலகில் காணாமல் போயிருந்தார். அவரை கண்டுபிடித்து வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் வி கஜேந்திரன் அழைத்து வந்திருப்பது மெச்சத்தக்கது. ஒரு விவசாயி போல் வயல்வெளியில் அமர்ந்து விதாத்துடன் நாகராஜ் சட்ட விவரங்கள் பேசுவது வித்தியாசமான காட்சி. அவர் தோற்றம் உருகிப் போய் இருந்தாலும் பேச்சும் நடிபபும் திடமோ திடம்.
நாகராஜ் சொன்ன அறிவுரைப்படி தைரியமாக கோர்ட்டில் விதார்த்தே தனக்கான வழக்கை வாதாடுவது வித்தியாசமான காட்சி.
விதார்த் ஜோடியாக நடித்திருக்கும் ரக்ஷனா விவசாயி மனைவியாகவே மாறி இருக்கிறார். ஆளும் உயரம், நடிப்பும் உயரம்..
இயக்குனர் வி. கஜேந்திரன் பொழுதுபோக்குக்காக ஒரு படம் எடுக்காமல் விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக இந்த கதையை தந்திருக்கிறார். இப்படத்தை தியேட்டரில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிராமத்திலும் அரசாங்கமே பொறுப்பெடுத்து திரையிட்டு விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு தரும் படமாக காட்ட வேண்டும்.
படத்தை திறம்பட இயக்கியிருக்கும் இயக்குனர் நிலத்தின் அசல் பத்திரத்தை விதார்த் அடகு வைத்து பணம் வாங்குவதுபோல் காட்டுகிறார். அசல் பாத்திரம் இல்லாமல் வங்கியில் எப்படி கடன் தருவார்கள்? எப்படி மோசடி செய்ய முடியும்? என்ற பெரிய ஓட்டையை கதையில் வைத்திருப்பது பதில் கிடைக்காத கேள்வி.
சி வெங்கடேசன் படத்தை தயாரித்திருக்கிறார்.
என் ஆர் ரகுநாதன் இசையில் இன்னும் கூட ஈடுபாடு காட்டியிருக்கலாம்.
அருள் கே சோமசுந்தரம் ஒளிப்பதிவு பரவாயில்லை.
மருதம் சிறு விவசாயின் சட்டப் போராட்டம்.

Review By
K Jayachandhiran
trendingcinemasnow.com
