படம்: மேக்ஸ்
நடிப்பு: கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், ரெடின் கிங்ஸ் லீ, சுனில், இளவரசு
தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு
இசை: அஜ்னிஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா
இயக்கம்: விஜய் கார்த்திகேயா
பி ஆர் ஓ: ரியாஸ் கே அஹமத்
அமைச்சர்கள் மகன்கள் ரவுடித்தனம் செய்ய அவர்களை சிறையில் அடைக்கிறார் புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப். அமைச்சர் மகன்கள் சிறையில் இருக்கும் விஷயம் தெரிந்தால் போலீஸ் நிலையத்தையே எரித்து நம் எல்லோரையும் கொன்றுவிடுவார்கள் என்று சப் இன்ஸ்பெக்டர் பயந்து சுதீப்புக்கு அட்வைஸ் செய்கிறார். அதை பொருட்படுத்தாமல் யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சுதீப் சொல்கிறார். இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்ட மந்திரி மகன்கள் கொல்லப்படுகிறார்கள். அது தெரியாமல் சிறையில் இருக்கும் மகன்களை போலீசை தாக்கிவிட்டு மீட்டு வர மந்திரிகள் அடியாட்களை அனுப்புகிறார்கள். அவர்கள் வருவதற்குள் மர்மமாக கொல்லப்பட்ட இரண்டு மகன்களின் உடல்களை மறைத்து வைக்கும் சுதீப், தங்களை தாக்க வரும் ரவுடி கூட்டத்தை ஒன் மேன் ஆர்மியாக நின்று எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அதிரடி ஆக்ஷனில் சொல்கிறது மேக்ஸ் படம்.
எஸ் எஸ் ராஜ மவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கிச்சா சுதீப் தற்போது கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவர் இதுவரை நடித்த படங்களில் இவ்வளவு ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.. அந்த அளவுக்கு மேக்ஸிமம் ஆக்சன் காட்சிகளில் கிச்சா சுதீப் நடித்து மிரள விட்டிருக்கிறார்.
வசனங்கள் கொஞ்சம் தான் ஆனால் ஆக்சன் படம் முழுக்க தெறிக்க விடுகிறது. கிச்சா சுதீப் ரவுடி கூட்டத்தை துவம்சம் செய்யும் காட்சிகள் அசரவைக்கிறது. குறிப்பாக பின்னணியில் சாமி வேஷம் போட்ட. பக்தர்கள் ஆவேசத்துடன் ஆட அதே ஆவேசத்துடன் ஆடிக்கொண்டு தன்னை தாக்க வரும் ரவுடி கூட்டத்தை அடித்து நொறுக்கும் கிச்சா சுதீப் அரங்கில் அனல் தகிக்க வைக்கிறார்.
ரவுடிகள் எப்படியெலலாம் தாக்க வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து தன்னுடன் இருக்கும் போலீசாரையும் அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு பிளானாக போட்டு கிச்சா சுதீப் அதிரடி காட்டுவது பரபரவென காட்சிகளை பறக்க வைக்கிறது.
ரவுடி கூட்ட தலைவனாக வருகிறார் சுனில்.
வரலட்சுமி சரத்குமார் எப்படி எல்லாம் போலீசார் காய் நகர்த்தி தங்களை ஏமாற்றுவார்கள் என்பதை யூகித்து சுனிலுக்கும் ரவுடிகளுக்கும் ஐடியா தருவது இன்ட்ரஸ்டிங்.
இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெடின் கிங்சிலி அவ்வப்போது சிரிப்பூட்டுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி உள்ளிட்ட ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களை தமிழில் தயாரித்து வழங்கி இருக்கும் கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன் சார்பில் முதன்முறையாக கன்னடத்தில் மேக்ஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். கன்னடத்தில் இப்படம் வெளியாகி ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி இருக்கிறது.
முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படத்தை எடுக்கிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு இயக்குனர் விஜய் கார்த்திகேயா களம் இறங்கி இருக்கிறார் அவரது நோக்கத்தை புரிந்து கொண்டு கிச்சா சுதீப் எப்படி எல்லாம் ஆக்ஷனில் பாயச் சொல்கிறாரோ அப்படியெல்லாம் பாய்ந்து அட்டகாசம் செய்திருக்கிறார்.
காந்தாரா படத்துக்கு இசையமைத்த அஜினீஷ் இப்படத்துக்கு பான் இந்தியா பாணியில் இசையமைத்து ஆக்சன் காட்சிகளுக்கு மிரட்சி ஏற்படுத்துகிறார்.
சேகர் சந்திரா கேமரா ஆக்சன் மூடுக்குள் ரசிகர்களை மூழ்கடித்து விடுகிறது.
மேக்ஸ் – ஆக்ஷனில் தெறிக்கவிடும் கிச்சா சுதீப்.

