Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

*தமிழக மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் “நிலை மறந்தவன் ” : எச்.ராஜா

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலி சோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க திமிரு படத்தில் நடித்த விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி மூட நம்பிக்கைகளால் அவர்கள் உயிருடன் விளையாடும் மத வியாபார கும்பலை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. .

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ட்ரான்ஸ் என்கிற படம் தான் தற்போது சிவமணியின் வசன உருவாக்கத்தில் தமிழுக்கேற்றபடி நிலை மறந்தவன் என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடை பெற்றது.

மதமாற்றதத்த்துக்கு எதிராகவும் மத வியாபாரிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழக பாஜகவின் தலைவர்கள் ஹெச்.ராஜா, அஸ்வத் தாமன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக பிரமுகர் கல்யாண ராமன், பத்திரிகையாளர் பிரபாகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

படத்தின் வசனகர்த்தா சிவமணி பேசும்போது, “பிராந்திய மொழிகளில் நல்ல நல்ல படங்கள் வருகின்றன. அதை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்த வகையில் மலையாளத்திலிருந்து இந்த படத்தை தமிழுக்கு மாற்றி இருந்தாலும் எந்த மாற்றங்களும் செய்யாமல் அதேசமயம் தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் விதமாக வசனங்களை எழுதியுள்ளேன்” என்று கூறினார்.

அர்ஜுன் சம்பத் பேசும்போது, “கேரளாவில் இப்படி ஒரு படத்தை தயாரிப்பது சாத்தியம் என்கிறபோது, தமிழில் இப்படி தயாரிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற ஒரு படம் தமிழில் வரவேண்டும் என நினைத்தேன். அதற்கேற்றவாறு இந்த நிலை மறந்தவன் படம் வெளியாக இருக்கிறது இயேசுவுக்கோ கிறிஸ்துவிற்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. அவற்றை வைத்து மத வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்.. பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை.சமீபத்தில் காஷ்மீரி பைல்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த நிலை மறந்தவன் படமும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்

பாஜக தலைவர் எச்..ராஜா பேசும்போது, “தமிழகத்தின் மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட் டுள்ள படம் என்று இந்த நிலை மறந்தவன் படத்தை சொல்லலாம். விவேகானந்தர் கூறியது போல மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசும்போது, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மத்தியில் இந்துக்கள் சிறுபான்மையினர் தான் என்கிற அதிர்ச்சித் தகவலை கூறினார்.. அதேபோல இந்தப்படத்தில் ஒரு பாதிரியார் கதாபாத்திரம் பேசும்போது அரசாங்கத்தில் நமக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அதனால் பிரச்சனை இல்லை என்று கூறுவது தான் தற்போது நிஜத்திலும் நடந்து வருகிறது..

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் விலைக்கு வாங்கி மதப்பிரச்சாரம் என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்க முயற்சித்து வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த படம் உண்மையை, நாட்டில் நடப்பதை அப்படியே சொல்கின்ற ஒரு படம்தான். தமிழக மக்களுக்கு பாடமாக இந்த படம் வந்துள்ளது” என கூறினார்.

மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஹெச்.ராஜா, “நாங்கள் கிறிஸ்துவையும் கிறிஸ்தவரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை அவர்கள் அதை வியாபாரமாக்கும்போது, மூடநம்பிக்கைகளை திணிக்கும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கிறோம். இதேபோன்று அப்போதே பராசக்தி படத்தில் இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை சாடியபோது இந்த கேள்வி அப்போது எழவில்லையே.. அந்தவகையில் மத வியாபாரிகளை வெளிப்படுத்தும் படம் தான். இந்த நிலை மறந்தவன்.

அதனால் இந்த படத்திற்கு எதிர்ப்பு என்பது தேவையில்லாத ஒன்று.. தன்நிலை மறந்தவன் தான் இந்தப் படத்தை எதிர்ப்பான். மதத்தை விற்காதீர்கள்.. அச்சுறுத்தி ஆசைவார்த்தை காட்டி மதம் மாற்றுவது தவறு என்கிற கருத்துக்களைத் தான் இந்த படம் கூறுகிறது.. அயோத்தியா மண்டபம் விவகாரத்தை இதனுடன் சேர்த்து பேச வேண்டாம் காரணம் அங்கே எந்த மத வியாபாரமும் நடக்கவில்லை என்றார்..

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு  தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ். இயக்கம் அன்வர் ரஷீத். இசை ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம். ஒளிப்பதிவு அமல் நீரத். படத்தொகுப்பு பிரவீன் பிரபாகர். வசனம்  சிவமணி. மக்கள் தொடர்பு  கே எஸ் கே.செல்வா

Related posts

Vishnu Vishal’s “Aaryan”   Pre-Release Event

Jai Chandran

ETERNALS have been welcomed by audiences across India!

Jai Chandran

Priyanka Chopra, Katrina Kaif praise TwoTwoTwo Song

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend