படம்: ராக்கி
நடிப்பு: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி, அனிஷா,ரவி வெங்கட்ராமன், பூ ராமு, ரிஷிகாந்த், ஜெயகுனார், கானா தண்டபானி, ஆகாஷ்,
தயாரிப்பு: சி ஆர்.மனோஜ்குமார்
இசை: தர்புகா சிவா
ஒளிப்பதிவு: ஷிரேயாஸ் கிருஷ்ணன்
இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
பி ஆர் ஒ : நிகில் முருகன்
தாயை கொன்றவனை கொலை செய்துவிட்டு அந்த குற்றத்துக்காக 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து தண்டனை முடிந்து வருகிறான் ராக்கி. அம்மா, தங்கையுடன் வாழ்ந்த வீட்டில் சென்று பார்க்கிறான். அங்கு தங்கையை காணவில்லை. அவரை பற்றி பழைய ரவுடி சாமியிடம் விசாரிக்கிறான். அதேபோல் ரவுடி தலைவன் மணி மாறனிடம் விசாரிக்கிறான். தன் மகனை கொன்றவனாக இருந்தாலும் ராக்கியை பழிவாங்காமல் விடுகிறார் மணிமாறன். ஒருகட்டத்தில் தங்கை இருக்கும் இடம் தெரிந்து அங்கு ராக்கி செல்ல அவனை பின்தொடர்ந்து வரும் சிலர் தங்கையை கொல்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் ராக்கி மீண்டும் மணிமாறனுடன் மோதுகிறான். அவரது ஆட்களை அடித்து நொறுக்கி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைக்கிறான். அப்போது தங்கையின் மகளை காட்டி மணிமாறன் தப்பிக்கிறார். தங்கை மகளுடன் தனது பூர்வீக நாடான இலங்கைக்கு செல்ல புறப்படு கிறான். ஆனால் மணிமாறன், ராக்கியை வழிமடக்கி கொல்ல ரவுடி கூட்டத்துடன் வருகிறார். இதன் முடிவு என்ன என்பதை ரத்தம் சிதற விடை அளிக்கிறது கிளைமாக்ஸ்.
ரத்தம், வன்முறை என்ற கத்தியின் மீது அம்மா, தங்கை, மகன், தந்தை பாசம் என பாதரசப்பூச்சு பூசி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். வறட்சியான கதை என்பதால் வண்ணங்களை குறைத்தும் பல காட்சிகளில் பிளாக் அண்ட் ஒயிட்டிலும் படமாக்கி பதற விட்டிருக்கி றார்கள்.
ராக்கி என்ற கதாபாத்திரத்தில் வசந்த் ரவி அசல் ரவுடியாக மாறி இருக்கிறார். முகத்தில் தெறித்த ரத்தம், கத்தி காயம் என தொடக்கம் முதல் இறுதிவரை பயமுறுத்தும் தோற்றத்துடனே நடமாடுகிறார்.
முகத்தில் வெறும் சோகத்தை மட்டுமே காட்டும் வசந்த் ரவி பாசத்தின் உணர்வுகளையும் கோபத்தின் வீரியத்தையும் காட்டத் தவறியிருக்கிறார். அவனை குத்து, இவனை வெட்டு என்று இயக்குனர் என்ன சொன்னா ரோ அதை மட்டுமே செய்திருக்கிறார்.
தன் தங்கையின் மகள் கண் எதிரிலேயே தன்னை தாக்க வருபவர்களை போட்டுத் தள்ளும் வசந்த் ரவி இறுதிக் காட்சியில் பாரதிராஜா கூட்டிவரும் பெரும் ரவுடி கூட்டத் திடம் சிக்கி சின்னபின்னாமாகப் போகிறார் என்று நினைத்தால் ”கைதி” கார்த்தி போல் மிஷின்கன் கொண்டு கூட்டத்தை சுட்டுத்தள்ளுவது திகில் பரப்புகிறது.
மணிமாறன் என்ற பாத்திரத்தில் பாரதிராஜா உருமாற்றம் அடைந்திருக்கிறார். உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டல் தொணியில் பேசி அதிரடி காட்டுவதும், தன் வார்த்தையை மீறி நடந்த மகனை அருகில் உட்காரச் சொல்லி அவனது விரலை துண்டிக்கச் சொல்லும் ஆக்ரோஷம் என இந்த வயதில் இப்படியொரு நடிப்பா என வியக்கவைக்கிறார் பாரதிராஜா.
ரோகிணி சில காட்சிகள் வந்து செல்கிறார். வசந்த் ரவியின் தங்கை குழந்தையாக வரும் அனிஷாவுக்கு எப்படித்தான் அவரது பாத்திரத்தை இயக்குனர் புரிய வைத்தாரோ பார்வையிலும், முகபாவத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கி இருக்கிறார்.
ரவுடி பசங்களாக வரும் இளவட்டங்கள் தெனாவட்டு காட்டுகின்றனர்.
தர்புகா சிவா மிரட்சியான இசை அமைத்திருக் கிறார். காட்சிகளில் காற்றின் வறட்சியை படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷிரேயாஸ் கிருஷ்ணன்.
அருண் மாதேஸ்வரன் தேர்வு செய்த கதைக் களத்தை இப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் இந்த வன்முறைக்கு தீர்வு என்ன என்பதையும் உணர்த்தி இருக்கலாம். கத்தியால் கழுத்தை அறுக்கும் காட்சிகளை இன்னமும் அழுத்தம் குறைத்து காட்டியிருக்கலாம்.
ராக்கி – ரவுடியிசத்துக்கு குடும்பத்தை பலி கொடுத்த வாலிபனின் எதிர்வினை.

