படம்: ஜெய்பீம்
நடிப்பு: சூர்யா,லிஜோமோல் ஜோஸ்,மணிகண்டன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், தமிழரசன், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கரன்,
தயாரிப்பு: 2 டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா, ஜோதிகா
இசை:சான் ரோல்டன்
ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கார்த்திக்
இயக்கம்: தா செ.ஞானவேல்
ரிலீஸ்: பிரைம் வீடியோ (ஒ டி டி )
பி. ஆர். ஓ: யுவராஜ்
பழங்குடிகளுக்கு நீதி கிடைக்க போராடும் வழக்கறிஞரின் கதை என ஒரு வரியில் இப்படத்தின் கதையை அடக்கி விடமுடியாது. வரிக்கு வரி சட்டத்தை வளைக்கும் போலீஸ், அதிகார வர்த்தகத்தின் மேம்போக்குத்தனம், ஜாதியை கட்டிக்கொண்டு அழும் கூட்டத்தின் அடாவடியையும் புட்டு புட்டு vaiத்திருக்கிறது படம்.
கிராம பகுதியின் ஒரு பகுதியில் பாம்பு பிடிக்கும் இருளர்கள் வசிக்கின்றனர். இருளர் இன ஜோடி ராஜாகண்ணு (மணிகண்டன்), செங்கேனி (லிஜோமோல் ஜோஸ்)மண் வீட்டில் வறுமை வாட்டினாலும் ராஜா கண்ணு, செங்கேணி எதிர்காலத்தில் கல்வீட்டு கனவில் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். ஊர் பணக்காரர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதை பிடிக்க வருகிறான் ராஜாகண்ணு. பாம்பை லாவகமாக பிடித்து செல்கிறான். மறுநாள் அந்த வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதாக பணக்காரர் புகார் தருகிறார்.பழி ராஜாகண்ணு மீது விழுகிறது. அவனையும் அவனது உறவினர்கள் 2 பேரையும் போலீஸ் லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்து திருட்டை ஒப்புக்கொள்ள சொல்கிறது. கடைசி வரை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் திடீரென்று 3 பேரும் சிறையிலிருந்து தப்பிவிட்டதாக போலீஸ் வலை வீசி தேடுகிறது. ராஜாகண்ணுவை காணவில்லையே என்று கதறும் அவனது மனைவி செங்கேனி சென்னையில் ஐகோர்ட் வழக்கறிஞர் சந்த்ருவிடம் (சூர்யா) முறையிடுகிறார். அவர் ஐகோட்டில் வழக்கு தொடுத்து செங்கெனியின் கணவன் என்னவானான், மற்ற 2 பேரின் கதி என்ன என்பதை அம்பலத்துக்கு கொண்டு வருகிறார்.
இதுபோன்ற வழக்கு கோர்ட்டில் 90களின் கால்கட்டத்தில் நடந்திருக்கிறது அந்த சம்பவத்தை பின்னணியாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
மணிகண்டன், லிஜோமோல் இருவரும் ராஜாகண்ணு, செங்கேனியாக பாத்திரத்தோடு கரைந்துபோயிருக்கிறார்கள். இருவரின் வறுமையின் நிறம் காட்டும் மேக்கப் ஒரு பக்கம் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது அதையெல்லாம்விட இருவரின் நடிப்பும் சில காட்சிகளில் நெஞ்சை பதறச்செய்கிறது.
லாக்கப்பில் மணிகண்டனை போலீஸ் இன்ஸ்பெக்கடர் லத்தியாலும் பூட்ஸ் காலாலும் அடித்தும், மிதித்தும் தாக்கும்போது பார்வையாளர்களின் உடலில் விழும் அடிபோல் வலிக்கிறது. கதாபாத்திரத்துக்காக மணிகண்டன் உண்மையாகவே பல காட்சிகளில் அடிவாங்கி இருக்கிறார். அந்த அர்ப்பணிப்புத்தான் அவரை மனதுக்குள் அழுத்தமாக பதிய வைக்கிறது.

லிஜோமோல் ஒரு பெண் போராளியாக மாறியிருக்கிறார். கண்முன் கணவன் சித்ரவதை செய்யப்படுவதை கண்டு கதறுவதும் பின்னர் அவரை கண்டு பிடிக்க சூர்யாவிடம் நடந்த உண்மைகளை சொல்லி கண்ணீர்விட்டு அழுவதும் நெஞ்சை பிழிகிறது.
எல்லா வலிகளையும் கேட்டு கண்களில் கோபம் பீறிட கோர்ட்டில் அனல் தெறிக்க வாதாடும் சூர்யா புதிதாக வழக்கறிஞர் அவதாரம் எடுத்திருக்கிறார். வழக்கறிஞராக மட்டுமல்ல மல் தான் எடுத்துக்கொண்ட வழக்கில் உண்மையை நிலைநாட்ட பல இடங்களில் சிஐடி வேலைகளையும் செய்கிறார்.
ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆகிவிடுமோ என்ற நிலை எழும்போது திடீரென்று புதிய ஆதரங்களை அளித்து அமர்க்களப்படுத்துகிறார் சூர்யா.
விசாரணை அதிகாரியாக பிரகாஷ்ராஜ் உன்னதமான குணசித்ர நடிப்பை அளித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் தங்களின் பணிகளை நியாயமாக செய்து நிஜ சம்பவங்கள்போல் காட்சிகளை சித்தரிக்க உதவி இருக்கின்றனர்.
சான் ரோல்டன் இசை காட்சிகளில் மிகை இல்லாமல் மிக்ஸ் ஆகி மயக்குகிறது. அதேபோல் எஸ்.ஆர்.கார்த்திக் தகுந்த கலர் ஷேடிங் கொடுத்து ஒளி உயிரூட்டி இருக்கிறார்.
தா. செ.ஞானவேல் சிந்தாமல் சிதையாமல் காட்சிகளை படமாக்கி கிளைமாஸில் டோனி சிக்ஸர் அடித்ததுபோல் காட்சியை அமைத்து அப்ளாஸ் அள்ளுகிறார்.
ஜெய்பீம்- நீதியின் மனசாட்சி பேசுகிறது.

