Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரவுபதி இயக்குனர் மோகன்.ஜி. தொடங்கும் பதிப்பகம்

திரவுபதி பட இயக்குனர் இயக்குநர் மோகன் ஜி கூறியிருப்பதாவது:

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது நான் இயக்கி உள்ள ’ருத்ரதாண்டவம்’ திரைப்படமும் விரைவில் திரையரங்கில் வெளிவர உள்ளது. கடந்த வாரம் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) வெளியாகி, 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி, சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒரு படைப்பாளியாக, திரைப்படத்துடன் இலக்கியத்தையும் வரலாற்றையும் தமிழ்ச் சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு ’திரெளபதி பதிப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பதிப்பகத்தின் வாயிலாக, வரும் செப்டம்பர் 10, விநாயகர் சதுர்த்தி அன்று ‘வென்று மண்கொண்டான்’ என்ற வரலாற்று நூலை வெளியிடவுள்ளேன்.
பிற்காலச் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அவர்களிடம் குறுநில மன்னர்களாக பணியாற்றிய சம்புவராய அரசர்கள் கி.பி. 1236 தொடங்கி படைவீட்டைத் தலைநகரமாக கொண்டு தொண்டை மண்டலத்தில் ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பால் தென்னிந்தியா மிகப்பெரும் இன்னலை சந்தித்தது. குறிப்பாக, ஆந்திராவில் ஏற்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் அஞ்சி இவர்களின் ஆட்சிப்பரப்பிற்குள் வந்தபோது அவர்கள் பாதுகாப்புடன் வாழ அவர்களுக்கு ’அஞ்சினான் புகலிடங்களை’ ஏற்படுத்தி பாதுகாப்புடன் வாழச் செய்துள்ளனர். ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் ஏற்படுத்தி, வேளாண் உற்பத்தி பெருக்கப்பட்டன. நாணயங்களை அச்சிட்டு வெளிட்டுள்ளனர். கடல் வணிகம் செழித்திருந்தன. கூத்துக் கலை வளர, கலைஞர்களுக்கு உரிமை வழங்கியுள்ளனர். அத்துடன் சமய விழாக்கள், வழிபாட்டிற்காக இறையிலி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய அறம் செறிந்த ஆட்சி நடத்திய சம்புவராய மன்னர்களை போற்றும் விதமாக, 30.09.1989 அன்று தமிழக அரசு, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திருவண்ணாமலைக்கு ‘சம்புவராயர் மாவட்டம்’ என்று பெயர் சூட்டினார்.
தமிழ் நிலத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை நின்று நிலைத்த தமிழ்ப் பேரரசு என்ற புகழுக்கு உரியது ‘சம்புவராயர் அரசு’ ஆகும். எனவே, அவர்களின் மாண்புகள், ஆட்சித்திறன், நிர்வாக முறை, ஆட்சிப் பரப்பு மற்றும் தமிழகத்தின் இடைக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் யாவற்றையும் வெளிக்கொண்டுவரும் விதமாக இந்த ஆய்வு நூலை பேராசிரியர், முனைவர் அ. அமுல்ராஜ் அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலை, திரெளபதி பதிப்பகம் வாயிலாக, முதல் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.

இவ்வாறு மோகன் ஜி கூறி உள்ளார்.

Related posts

டாக்டர் ( பட விமர்சனம்)

Jai Chandran

KodiyilOruvan , VijayaRaghavan Team Whishes Vijayantony

Jai Chandran

MotherSong From Valimai out on 5th Dec

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend