படம்: ஜாக்கி
நடிப்பு: யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதனராவ்
தயாரிப்பு: பிரேமா கிருஷ்ணதாஸ்
இசை: சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார்
இயக்கம்: பிரகபல்
பிஆர்ஓ: நிகில் முருகன்
ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற கலாச்சார விளையாட்டுகள் போல் கிடா முட்டு சண்டையும் காலம் காலமாக மதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. கிடா முட்டு சண்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது ஜாக்கி திரைப்படம்.
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமர் (யுவன் கிருஷ்ணா)தான் வளர்க்கும் காளி என்ற கிடாவை கிடா முட்டு போட்டிக்கு அழைத்து வருகிறார். இந்த போட்டியில் வருட வருடம் ஜெயித்து மெடல் வாங்கும் கார்த்தி (ரிதான் கிருஷ்ணாஸ்) இந்தாண்டும் போட்டியில் வெல்கிறார். அவரது கிடாவுடன் மோதலுக்கு தயாராகிறார் ராமர். இவர்களது கிடாக்கள் மோதும் நிலையில் ராமரின் கிடா காளி வெற்றி பெறுகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத கார்த்தி அடுத்தடுத்து ராமருக்கு தொல்லை தருவதுடன் ராமரின் கிடா காளியை வெட்டி சாய்க்க முயல்கிறார். இந்த மோதலின் முடிவு என்ன என்பது ஆக்சன் அதிரடியுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
கிடா முட்டு சண்டை என்பது அவ்வப்போது ஒரு சில படங்களில் ஓரிரு காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. ஆனால் கிடா முட்டு சண்டையை மையமாக வைத்து வந்திருக்கும் முதல் படம் இதுதான். இந்த கதையை தயாரிப்பதற்காக இயக்குனர் பிரகபல் மூன்று ஆண்டுகள் மதுரையிலேயே தங்கி அதன் வரலாறுகளை ஆராய்ந்து ஸ்கிரிப்ட் உருவாக்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஏனோ தானோ என்று கதையை எழுதி விடாமல் கிடா முட்டு சண்டை பாரம்பரியம், சென்டிமெண்ட், காதல் என்று ஒரு முழு திரைப்படமாக திரைக்கதை அமைத்திருப்பது ரசிக்க முடிகிறது.
ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
யுவன் கிருஷ்ணா தனது கிடா காளியிடம் காட்டும் பாசம், நேசம் எல்லாமே உயிர்ப்பு டன் இருக்கிறது. அந்த கிடாவுடன் அவர் வருடக் கணக்கில் பழகி தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி புரிந்து கொள்ள முடிகிறது.
வில்லன் கார்த்தியாக வரும் ரிதான் கிருஷ்ணாஸ் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை தனது வில்லத்தன கெத்தை விடாமல் நடித்திருக்கிறார். முரட்டுத்தனமான கிடா உடன் இவரும் நன்கு பழகித்தான் இந்த படத்தில் நடித்திருக்க முடியும் என்பதை முரட்டு கிடாவின் கொம்பை பிடித்து சண்டை மைதானத்திற்கு அழைத்து வரும்போது உணர முடிகிறது.
கிடாக்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் முட்டி மோதிக் கொள்ளும் அந்த சண்டையின்போது எழும் கொம்பு மோதல் சத்தம் காதில் இடியாக பாய்கிறது.
அம்மு அபிராமி காதல் காட்சிக்கு பயன்பட்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு பெரிதாக வேலை இல்லை.
எப்போதும் வில்லனாக வரும் மது சூதனராவ் இந்த படத்தில் நியாயமான நடுவராக வருவது ஆச்சரியம்.

படத்தை பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்திருக்கிறார்.
புது இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மதுரை மண்ணுக்கு ஏற்ற, கிடா சண்டைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிற இசை அமைத்திருக்கிறார்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு பழைய மதுரையை பார்ப்பது போல் காட்சிகளை சித்தரித்திருக்கிறது.
ஆர் பி பாலா நறுக்கு தெறிக்கும் வசனங்களை எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே மட்டி என்ற படத்தை இயக்கிய பிரகபல் மற்றுமொரு ஜாக்கி என்ற கடினமான கதையை கையாண்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
ஜாக்கி – காணக் கிடைக்காத கிடா மோதல் படம்.

Review By K.Jayachandhiran
Trending cinemas now. com
