படம்: ஒன்ஸ் மோர்
நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜெகபர், மோனிஷ் எலமாறன், சித்ரா லட்சுமணன்
தயாரிப்பு: யுவராஜ் கணேசன்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
பி ஆர் ஒ : யுவராஜ்
கதை : ரகுவரனை (அர்ஜுன் தாஸ்) தேடித் தேடி காதலிக்கிறார் அஞ்சலி (அதிதி சங்கர்). ஒரு கட்டத்தில் இவர்களுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போதுதான் ரகுவரனின் பழைய காதலி கண் முன் வந்து நிற்கிறார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ரகுவரனை கேட்கிறாள். இந்த இக்கட்டான சூழலில் ரகுவரன் எடுத்த முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஒரு மெல்லிய காதல் கதை என்றாலும் அதற்கு இசையால் அபிஷேகம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்.
ரகுவரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். வில்லத்தன இமேஜிலலிருந்து மெல்ல மெல்ல ஹீரோ இமேஜ் க்கு தன்னை மாற்றிக் கொண்டு வரும் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி லவ்வர் பாயாக வருகிறார். இவருக்கு லவ்வர் பாய் இமேஜ் பொருத்தமாக இருக்குமா என்று இரு வேறு சிந்தனைகள் இருந்தாலும் காதலி மீது காட்டும் பாசம் நேசம் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து அவரை லவ்வர் பாயாக ஒப்புக்கொள்ள வைக்கிறது. என்ன ஒரு விஷயம், அவரது கரகர குரல் லவ்வர் இமேஜை கொஞ்சம் பாதிக்கத்தான் செய்கிறது. அதை உணர்ந்து தான் அவரும் வசனங்களை மணிரத்தினம் பட பாணியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக பேசியிருக்கிறார். ஒரு சில இடங்களில் டப்பிங் செய்தது ரொம்பவும் மைக் அருகில் நின்று பேசி இருப்பார் போல் தெரிகிறது அந்த வசனங்களை புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது. மற்றபடி தனது மலையாள காதலி சோனா ஒலிக்கல்லிடம் காதலை நன்றாகவே வெளிப்படுத்தி யிருக்கிறார்.
சோனாவை பார்த்தவுடன் காதல் கொள்வது அடுத்த சில காட்சிகளிலேயே அவர்களுக்கு காதல் மலர்வது, தன் மனதில் புதைந்திருக்கும் ஆதங்கத்தை அர்ஜுன் தாசனிடம் ஏரி அருகில் படுத்தபடி சோனா பகிர்ந்து கொள்வது எல்லாமே பலரது காதல் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமணம் செய்து கொண்டு எட்டு பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் சோனா அடுத்த சில நிமிடங்களில் காதலை முறித்து விடுவது ஏன் என்பது சஸ்பென்ஸ்.
திடீரென்று சோனா காதலை ஏன் முடித்துக் கொண்டார் என்பது தெரியாமல் அர்ஜுன் தாஸ் தவிக்கும் காதல் தவிப்பு, மன உளைச்சல், மன வலி எல்லாவற்றையும் தன் முகத்தில் கொண்டு வந்து கொட்டித் தீர்ப்பது இவருக்குள் இப்படி ஒரு நடிப்புத் திறமையா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

துள்ளல் காதலியாக வருகிறார் அதிதி சங்கர். திருமணம் நடக்கும் சமயத்தில் இவர் அங்கிருந்து ஓடி விடுவது படத்தில் இன்னொரு டுவிஸ்ட். சின்னச் சின்ன சீண்டல் சின்னச் சின்ன குறும்புகள் அதிதீயிடம் வெளிப்படுவது அவரது இருப்பை தக்க வைக்கிறது.
படத்தை இளவட்டங்களை நம்பி யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படம் முழுக்க இசை மழை பொழிந்திருக்கிறார் சுமார் 15 பாடல்களுக்கு மேல் படத்தில் இடம்பெற்றாலும் கேட்க சலிக்கவில்லை. காரில் லாங் டூர் பயணிக்கும் எல்லோருமே கேட்டு பிரபலமான வா கண்ணம்மா பாடல் இந்த படத்தில் தான் இடம் பிடித்திருக்கிறது. பாடல் மட்டுமல்ல பாடல் படமாக்கப்பட்ட விதமும் அழகோ அழகு
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு குறைவில்லை
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் புதிய காதல் கதையை சொல்லா விட்டாலும் உணர்வு பூர்வமான ஒரு காதலை சொல்லி இருக்கிறார். முந்தானை முடிச்சு காலத்திலேயே இப்படிப்பட்ட காதல் கதைகள் வந்திருந்தாலும் இந்த படத்தில் காதலை சொல்லி இருக்கும் விதம் என்னதான் கிளைமாக்சில் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
ஒன்ஸ்மோர் – முக்கோண காதல் தீர்வு.

:
