Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காந்தா (பட விமர்சனம்)

படம்: காந்தா

நடிப்பு: துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்திரி சங்கர், விஜய் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன்

தயாரிப்பு: ராணா டகுபதி, துல்கர் சல்மான் , பிரசாந்த் பொட்லூரி, ஜாம் வர்கீஸ்

இசை: ஜானு சந்தர்

ஒளிப்பதிவு: டேனி சாஞ்செஸ் லூபஸ்

இயக்கம்: செல்வமணி செல்வராஜ்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

காந்தா இது சாதாரண டைட்டில் இல்லை . இந்த டைட்டிலுக்கு ஒரு காந்தவிசை இருக்கிறது.. ரத்தக்கண்ணீர் படத்தில்
நடிகவேல் எம் ஆர் ராதா,  அடியே காந்தா என்று வசனம் பேசுவார். அது பிரபலமானது. அந்த காந்தாவா இந்த காந்தா  படம் என்றால் கிடையாது. ஆனால் காந்தம் போல் இழுக்கும்  கதை  இந்த டைட்டிலுக்குள் ஒளிந்திருக்கிறது.

கதை: 1950 முதல் 70கள் வரையிலான  காலகட்டங்களுக்குள் நடக்கும் கதை என்று கூட கூறலாம்..
பிரபல இயக்குனர் ஐயாவுக்கும் (சமுத்திரக்கனி), பிரபல நடிகர் டிகே மகாதேவனுக்கும் ( துல்கர் சல்மான்) தகராறு ஏற்பட்டு ஒரு படம் பாதியிலேயே நின்று விடுகிறது. பட நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மீண்டும் அந்த படத்தை தொடங்குவதற்கு இயக்குனரும், டிகே மகாதேவனும் ஒப்புக்கொள்கிறார்கள். பிடிப்பில் இவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு சீனுக்கும் மோதல் நடக்கிறது. கதாநாயகி குமாரியை (பாக்யஸ்ரீ ) தன் கட்டுப்பாட்டுக்குள் இயக்குனர் வைத்துக்கொள்ள முயல்கிறார். ஆனால் டி கே மகாதேவன் அவரிடம் அன்பு காட்டி காதல்
வயப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் டி கே மகாதேவன் மனைவி குடும்பத்துக்கு தெரிய வருகிறது.  இதனால் அவரை அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள டி கே மகாதவன் திட்டமிடுகிறார். மறுநாள் திருமணம் என்ற நிலையில் குமாரி சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தப் படத்தின் கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும் இதற்கு மேல் என்ன நடந்தது, யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள்? என்ற விவரங்களை எல்லாம் படத்தின் கிளைமாக்ஸ் வரை காத்திருந்து பாருங்கள்..

வழக்கமான ஒரு கமர்சியல் படம் என்று சொல்வதை விட இது 60, 70 ஆண்டு காலகட்டங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் நடந்த சில முன்னணி நடிகர் நடிகைகள் இயக்குனர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து திரைக்கதையாக அமைத்து ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் இயக்கி இருக்கிறார் செல்வமணி செல்வராஜ்.

தொடக்க காட்சியிலேயே துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெறுவதால் இது எம்ஜி ஆரை, எம் ஆர் ராதா சுட்ட கதையாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது, பின்னர் பிரபல நடிகர் சிறைக்கு அனுப்பப்படுகிறார் ஒருவேளை இது பாகவதர் கதையாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது, திடீரென்று பிரபல ஹீரோவும், உடன் நடிக்கும் நடிகையும் காதலிப்பதால் இது புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி கதையாக இருக்குமோ என்று பல்வேறு சந்தேகங்களை ஒவ்வொரு சீனும் எழுப்புகிறது.. இதெல்லாம் தான் இந்த படத்தை  கிளைமாக்ஸ் வரை என்னதான் நடக்கிறது என்பதை பார்க்க வைக்க ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறது.

துல்கர் சல்மான் சமீபத்தில் நடித்த படங்கள் சீதா ராமம், லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது. அடுத்து என்ன  படத்தில் நடிக்கப் போகிறார்  வரப்போகிறார்,  எப்படி ஆச்சிரியத்தை தரப் போகிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த  நிலையில் “இதுக்கெல்லாம் மேல  ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு” என்பது போல் காந்தா படத்தில் நடிப்பை பீய்த்து உதறி இருக்கிறார்..
நடிப்புச் சக்கரவர்த்தி என்று அவருக்கு இந்த படத்தில் டைட்டில் கொடுக்கப்படுகிறது இதுவரை எந்த பட்டப் பெயரும் இல்லாத துல்கர் சல்மானுக்கு இந்த டைட்டில் இனி நிரந்தரமாக அமைந்துவிடும் என்றே தோன்றுகிறது.

நடிகர் திலகம் சிவாஜி இந்த படத்தை பார்த்திருந்தால் அவரே துல்கர் சல்மானுக்கு நடிப்புச் சக்கரவர்த்தி என்ற டைட்டிலை வழங்கி இருப்பார் என்று கூட தோன்றுகிறது.
மம்முட்டி மகன் துல்கர் சல்மான் என்ற பெயரை மாற்றி துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி என்றளவுக்கு தனது நடிப்பால் கொடியேற்றிக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்..

ஒரு காட்சியில் கதாநாயகி பாக்ய ஸ்ரீ நிஜமாகவே தன்னை கன்னத்தில் அறைந்து நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்வதை அறிந்ததும் அதிர்ச்சியாகும் துல்கர் மீண்டும் ஒரு டேக் எடுக்கலாம் என்று கேட்டு அவரே பாக்யஸ்ரீ கையை பிடித்து தனது கன்னத்தில் பளார் பளார் என்று இடைவிடாமல் அறைந்து கொள்ளும்போது பாக்யஸ்ரீ,  சமுத்திரக்கனி மட்டுமல்லாமல் அரங்கில் இருக்கும் ரசிகர்களையும் உறைய வைத்து விடுகிறார். துல்கர் சல்மானின் நடிப்பை  பற்றி ஒரு பெரிய ஆர்ட்டிகளே எழுதலாம் .. அதற்கு  இந்த இடம் போதாது..

ஐயா என்ற இயக்குனர் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்திருக்கிறார். தாங்கி தாங்கி நடந்து வரும் அவரது நடையும்,  கண்களில் முறைப்பும், பேச்சில் கடினமான வார்த்தைகளும் அந்த கதாபாத்திரமாகவே அவரை  மாற்றிவிடுகிறது.

புது முகமாக அறிமுகமாகி இருக்கும் பாக்கியஸ்ரீ அந்த காலகட்டத்து ராஜகுமாரி சரோஜாதேவி சாவித்திரி போன்றவர்களை ஞாபகப்படுத்தும் வகையில் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்.

ராணா டகுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வந்து இரண்டாம் பாதி படம் முழுவதையும் தனது அதிரடிப்பால் விறுவிறுப்பாக்குகிறார்.

ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்திரி சங்கர், விஜய் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

ராணா டகுபதி, துல்கர் சல்மான்
, பிரசாந்த் பொட்லூரி, ஜாம் வர்கீஸ் இணைந்து தயாரித்திருக்கின்றனர்..

ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். பிளாக் அண்ட் ஒயிட் காலகட்ட காட்சிகளை ஒளிப்பதிவாளர் டேனி சாஞ்செஸ் லூபஸ் படமாக்கியி ருப்பது அரங்கில் இருப்பவர்களை 60, 70 ஆண்டுக்கு முந்தைய காலகட்டங்களுக்கு கொண்டு சென்று விடுகிறது

அமெரிக்கா செல்ல இருந்த இயக்குனர் செல்வமணி செல்வ ராஜை,  காந்தா கதை வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவரை மடக்கி போட்டு வருடகணக்கில் இந்த படத்திலேயே தயாரிப்பாளர்கள் அவரை முடக்கி போட்டதன் ரகசியம் படத்தை பார்க்கும் போது தெரிகிறது. இந்த படம் உருவாகாமல் இருந்திருந்தால் அதுவும் இந்த இயக்குனர் உருவாக்காமல் இருந்திருந்தால் திரை உலகம் ஒரு நல்ல படைப்பை  மிஸ் செய்திருக்கும்..

காந்தா- ஈகோ போராட்டத்தின் உச்சம்..

Review By

K Jayachandhiran

www.Trending cinemas now.com

Related posts

Sendhil V Thyagarajan elected as Treasurer of Indian Rugby Federation

Jai Chandran

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா

Jai Chandran

Rocky Promo song featuring Nayanthara Out Tomorrow..!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend