கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான இன்று அவருக்கு வாழ்த்து மாலை சூட்டி உள்ளார் இயக்குனர் வி.,சி.குகநாதன். அவர் கூறியதாவது:
எங்கள் அண்ணனே…
திராவிட அரசியலின் கண்ணனே…
திரையுலகை எழுத்தால் ஆண்ட மன்னனே…
உங்கள் பிறந்தநாள் உலகத் தமிழருக்கெல்லாம்
உவகை பொங்குகின்ற நாள்!
ஆனால், இந்த ஆண்டு கொரோனாவின் கோரப் பிடியிலே வையகமே வாழ்விழந்து வாடி நின்றாலும், தமிழ்நாட்டில் உங்கள் உடன்பிறப்புகள் நன்றிக் கண்ணீரோடு ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
ஒரு தந்தையாக, ஒரு குடும்பத் தலைவனாக, ஐம்பது ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவனாக, ஐந்து முறை மாநிலத்தின் முதல்வராக
தாங்கள் ஆற்றிய பணிகள் வரலாற்று வரைபடத்தின் மைல்கற்களாக நிலைத்து நிற்கின்றன.
அதையெல்லாம் எழுதுவதானால் என் பேனா தீர்ந்து போகும்.
என் கரங்கள் ஓய்ந்து போகும்.
வரலாறு படைத்த அசாதாரண மனிதர் நீங்கள்…
ஆனால், இன்று நீங்களே புளகாங்கிதம் அடையவேண்டிய நாள்.
நேரு கோமகனாரின் வளர்ப்பிலே தோய்ந்து, வரலாறுகள் படைத்து, உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்ட அன்னை இந்திரா போல்…
நீங்கள் செதுக்கிச் செதுக்கி வளர்த்து,
உழைப்பு உழைப்பு என்று சொல்லிக் கொடுத்த உங்கள் மகன் முதல் படியிலே வைத்த அடியிலே
பழைய வரலாறுகள் எல்லாம் நொறுங்கிப் போயின.
நமது தளபதிதானே என்று சாதாரணமாக எடைபோட்ட நம்மவரே வியந்து பார்க்கின்ற அளவுக்கு,
அடுத்தடுத்து அவர் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும்
எதிர்க்கவே முடியாத, எந்தப் பிழையும் அற்ற புதுமையான திட்டங்களாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.
பெருந்தொற்றால் நலிந்து கொண்டிருக்கும் தமிழகத்தைக் காப்பாற்றப் போராடுகின்ற உங்கள் மகனின் செயல்களை
மாற்றாரும் இன்று மனம்விட்டு பாராட்டுகின்றார்கள்.
குடும்ப அரசியல் என்று பேசும் ஆன்மீகவாதிகளிடம் நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.
சிவனுக்கு முருகன் என்ன உறவு?
முருகனுக்கு
பெருமாள் என்ன உறவு?
பெருமாளுக்கு
ஐயப்பன் என்ன உறவு?
பிள்ளையாருக்கு
பார்வதி என்ன உறவு?
பிரஜாபதிக்கு சிவன் என்ன உறவு?
‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை தெய்வங்களும் நம்மைக் காக்கின்றன’
என்பதை மறுத்துப் பேச முடியுமா இந்த ஆன்மீகவாதிகளால்?
இப்போது நடக்கும் பெரும்தொற்றில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற
உங்கள் குடும்பமும், நீங்கள் வளர்த்து விட்ட கழகத்தின் குடும்பங்களும்
களத்திலே உயிரைப் பணயம் வைத்துப் போராடும் பாங்கினைப் பார்த்த பின்னாலும்,
‘குடும்ப அரசியல்’ என்று
இந்த ஆன்மிகவாதிகள் பேசமாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
பழக்கடை ஜெயராமன்
கட்சி மீது எவ்வளவு பாசம் கொண்டவர் என்பதை நான் அறிவேன். இந்த நாடே அறியும்.
அவர் மகன் ஜே.அன்பழகன் களப்பணியிலே உயிரை இழந்துவிட்டார்.
எத்தனை உடன்பிறப்புகள் உயிரைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஆனாலும், அஞ்சி நடுங்காமல் பெரும்தொற்று நோயாளிகளை
கோவையிலே நேரிலே சந்தித்து உரையாடிய உங்கள் மகன்!
தூத்துக்குடி மக்களுக்காக தெருத்தெருவாக சுற்றிப் பணியாற்றும் உங்கள் மகள்!
தமிழகம் முழுவதும் தைரியமாக சுற்றிவரும் உங்கள் பேரன்!
உங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மாறனின் மகன் தயாநிதிமாறன்,
சென்னையில் அத்தனை தெருக்களிலும்
தொற்றைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றிவருவது…
தங்களின் மொத்த குடும்பமும் தமிழக மக்களைக் காப்பாற்ற ஓடி ஓடி உழைக்கின்றனர் என்பது காட்சி. அதற்கு சாட்சியே தேவையில்லை.
இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை நமக்கு அளித்துவிட்டுப் போயிருக்கும் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியுமா!
‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’
என்று சூளுரைத்த தங்களின் அற்புதமான குடும்பத்தை இன்று தமிழகமே கொண்டாடுகிறது.
மிக விரைவிலே பாரதமே கொண்டாடப்போகிறது.
இது உங்களுக்கு மகிழ்ச்சியான நாள் அல்லவா!
அண்ணனே, மகிழுங்கள்.
உங்கள் குடும்பம் தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறது.
வாழ வைக்கப் போகிறது.
இன்னும் பல ஆண்டுகளுக்கு அதன் சரித்திரத்தைப் புதிதாக எழுதப்போகிறது என்பதை அடித்துச் சொல்லுகிறேன்.
– இவ்வாறு வி.செ.குகநாதன் கூறி உள்ளார்.