படம்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நடிப்பு: அசோக் செல்வன். ரியா. மணிகண்டன். அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, பானுப்ரியா, அனுபாமா குமார்,
தயாரிப்பு: ஏஆர் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்
இசை: ரதன்
ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்.கே
இயக்கம்: விஷால் வெங்கட்
பி.ஆர்.ஓ: 3நிகில்
சில நேரங்களில் சில படங்கள் இதுபோல அபூர்வமாக வருவதுண்டு. அடிதடி, ஆர்ப்பாட்டம், ஆளை வெட்டும் வில்லன் என எந்த கமர்ஷியல் அம்சமும் இல்லை. இயல்பான மனிதர்களின் வாழ்க்கையை கொண்டு எப்படி துக்கம் வந்தபோதும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள்.
வயதான அப்பா நாசர் மகன் அசோக் செல்வன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மகன் அப் ஹாசன், வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை பிரவின் ராஜா மனைவி ரித்விகா. இவர்களில் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் எல்லா குடும்பத்தையும் பாதிக்கிறது. வயதான தந்தை நாசர் த்னது மகன் திருமண பத்திரிகையiை கொடுக்க நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது காரில் அடிபட்டு இறக்கிறார். இந்த சம்பவத்தை பிரவின் செய்தாலும் அதில் அபி ஹாசன் சிக்கிக் கொள்கிறார். போலீஸ்வரை புகார் சென்று யார் நாசரை காரில் அடித்துக்கொன்றது என்ற விசாரணை பரபரப்பாக நடக்கிறது. இதற்கிடையில் நான் கொல்லவில்லை என்று அபி ஹாசன் கதற கார் ஏற்றி விபத்து நடத்திய பிரவின் தப்பிக்க முயல்கிறார். இந்த குழப்பமான சூழலில் அடுத்த நடப்பது என்ன என்பதற்கு மனிதாபிமான உணர்வுடன் ஒரு முடிவை சொல்கிறது படம்.
வயதான காலத்தில் வீட்டில் இருக்கும் முதியவர்கள் தனது பிள்ளைகளால் எப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்பதை சில வசனங்களில் இயக்குனர் தெளிவு படுத்திவிட்டாலும் அதை நாசுக்காக நாசர், அசோக்செல்வனுக்கிடையேயான தந்தை, மகன் பாசத்தில் வேறு கோணத்தில் சொல்லியிருப்பது நயம்.
”இன்றைக்கு நல்ல நாள் திருமண பத்திரிகையை கொடுக்க ஆரம்பிக்கலாம்” என்று நாசர் சொல்ல அதை ஏற்காமல் ”அடுத்த வாரம் தரலாம் நீங்கள் சும்ம இருங்கள்” என்று நாசரை மகன் அசோக் செல்வன் கண்டிப்பதும் பின்னர் அப்பாவை திட்டிவிட்டோமே என்று நண்பனிடம் சொல்லி வருந்துவதும் உணர்வுப்பூர்வமான காட்சிகள்.
நாசர் காரில் அடிபட்டு சாவார் என்று சற்றும் எதிர்பாராத நிலையில் அந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பல சம்பவங்கள், உணர்வுகள், மோதல், குடும்ப சங்கடம் என பல அம்சங்கள் படம் முழுவதும் சுற்றி வருவது அரங்கை அமைதிக் கடலாக்குகிறது.
அசோக் செல்வன். ரியா. மணிகண்டன். அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, பானுப்ரியா, அனுபாமா குமார் என இத்தனை நடசத்திரங்கள் இருந்தாலும் யாரும் இதையொரு சினிமாவாக பார்த்துக்கொண்டிருக் கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடாதபடி நிஜ பாத்திரங்களாக கண்முன் உலா வருவது கதையின் பலம்.
ஏழை வீட்டிலும் சரி, பணக்கார வீட்டிலும் சரி சந்தோஷமும் துக்கமும் ஒன்றுதான் என பளிச்சென பதிவு செய்திருக்கும் இயக்குனர் இறுதியில் எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவை சொல்லி சந்தோஷமான வாழ்வின் சூட்சமத்தை சொல்லி இருப்பது கைதட்டல் பெறுகிறது.
இயக்குனர் பாலு மகேந்திரா படங்கள் எப்படி ஒரு பதிவாக இருக்குமோ அதுபோல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை ஒரு பதிவாக செய்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். இப்படத்தின் டைட்டில் கதாசிரியர் ஜெயகாந்தனின் உபயம்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் முடிந்தவரை காட்சிகளில் போலித்தனம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
யார் வழியில், உன் பிரிவு ஆகிய பாடல்கள் ரதன் இசையில் காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது.
.கே.பிரசன்னாவின் படத் தொகுப்பு பல கோணங்களின் கதையை ஒரே நேர்க்கோட்டில் ஒருங்கிணைத்திருப்பது பாராட்டதக்கது.
சில நேரங்களில் சில மனிதர்கள் – வாழ்வின் எதார்த்தம்.