தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் மாறா. அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான இப்படம் ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது இந்தப் படத்தில் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர்.
திலீப் குமார் இயக்கத்தில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர். தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் தேடிச் செல்லும் காதலும் இசையும் கலந்த அழகான பயணம் தான் இந்தக் கதை.
இந்தப் படம் பற்றி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ தளம், “மேடியின் மீதிருக்கும் காதல் அளவுக்கு இந்த அதிசயக் கதையின் மீது நாங்கள் ஏற்கனவே காதல் கொண்டுவிட்டோம், ஜனவரி 8, 2021 அன்று மாறாவை ப்ரைமில் சந்தியுங்கள்” என்று பகிர்ந்துள்ளது.
ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார், கார்த்திக் முத்துக்குமார் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனித்திருக்கின்றனர், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புச் செய்திருக்கிறார்.