விமர்சனம்

தேவி 2 (பட விமர்சனம்)

படம்: தேவி 2

நடிப்பு: பிரபுதேவா, தமன்னா, நந்திதா, டிம்பிள் ஹயாதி, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, அஜ்மல் அமீர்
தயாரிப்பு: ஐசரி கணேஷ், ஆர்.ரவீந்திரன்
இசை சாம்.சி.எஸ்
ஓளிப்பதிவு அயனன்கா போஸ்
இயக்குனர் ஏ.எல். விஜய்

பிரபுதேவா, தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக் கிறது. முதல் பாகத்தில் ரூபி பேய் தமன்னாவை பிடித்து ஆட்ட ஒப்பந்தம் முடிந்த நிலையில் அந்த பேய் தமன்னாவைவிட்டு விலகுகிறது. மீண்டும் அந்த பேய் தமன்னாவை பிடிக்குமா என்று ஜோதிடரிடம் கேட்க அவரோ இந்த நாட்டில் இருந்தால் கண்டிப்பாக பிடிக்கும் நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த தீவு பகுதிக்கு சென்றால் மீண்டும் அந்த பேய் வராது என்கிறார். அதை நம்பி பிரபுதேவாவும், தமன்னாவும் மொரிஷியஸ் தீவில் குடியேறுகின்றனர். தனி வீடு எடுத்து இருவரும் தங்கும் நிலையில் அமானுஷயங்கள் நிகழ்கின்றன. மறுபடியும் தமன்னாவுக்கு பேய் பிடித்துவிட்டதோ என்று பிரபுதேவா பயப்படும்போதுதான் பேய் பிடித்திருப்பது தமன்னாவுக்கு இல்லை, பிரபுதேவாவுக்கு என்ற உண்மை தெரியவருகிறது. அதுவும் இரண்டு பேய் அவரை பிடித்தாட்டுகிறது. அலுவலகத்துக்கு செல்வதாக கூறி புறப்படும் பிரபு. தேவா நந்திதா, டிம்பிள் பின்னால் சுற்றி காதலை வெளிப்படுத்துகிறார். அதைக் காணும் தமன்னா கடுப்பாகிறார். இதற்கெல்லாம் பிரபுதேவா உடம்பில் இருக் கும் 2 பேய்கள்தான் காரணம் என்று முடிவு செய்து அவைகளிடம் அக்ரிமென்ட் போடுகிறார் தமன்னா. ஒப்பந்தப்படி அந்த பேய்கள் தங்களின் ஆசை நிறைவேறியவுடன் பிரபுதேவா உடம்பிலிருந்து விலகிச் செல்கிறதா என்பது கிளைமாக்ஸ்.

திகிலை ஏற்படுத்தி பயத்தை உண்டாக்கி படபடப்பை அதிகரிக்கச் செய்வதுதான் பேய் படங் களின் பாணியாக இருக்கிறது. ஆனால் விஜய் இயக்கிய தேவி முதல் பாகமாகட்டும், 2வது பாகமாகட்டும் ஏதோ பக்கத்து வீட்டு ஆன்ட்டி, அங்கிளிடம் டீல் பேசுவதுபோன்ற சாதாரண விஷயமாக்கி குழந்தைகளையும் கைகொட்டி சிரிக்க வைக்கும் வகையில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைக்கிறார். இயக்குனர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பிரபுதேவாவும், தமன்னாவும் வளைந்து கொடுத்திருக்கின்றனர்.
  
ஆபிஸிக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் பிரபுதேவா நடுவீதியில் நந்திதா, டிம்பிளை கட்டிப்பிடித்து குத்தாட்டம்போட அதைப்பார்க்கும் தமன்னா குழம்பும்போது பிரபுதேவா டபுள் ஆக்‌ஷன் செய்திருப்பதை இயக்குனர் ரகசியமாக வைத்திருந்திருக்கிறரே என்று எண்ணவைக்கிறார். போகப்போக ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. இந்த கூட்டணியில் கோவை சரளாவும் கலந்துகொண்டு கலகலக்க வைக்கிறார்.

கண்டபெண்களோட பிரபுதேவாவை சுத்தவிடாமலிருக்க நீதான் அவரை வளைத்துபோடணும் என்று தமன்னாவிடம் சிக்னல் கொடுத்த அடுத்த காட்சியில் பால்போன்ற பளிங்கு மேனியை பளிச்சென காட்டிக்கொண்டு ஆட்டம்போடும்போது இளசுகளை கிரங்கடிக்கிறார் தமன்னா. கவர்ச்சி ஓகே தான் ஆனால் அவர் ஆடும் ஆட்டம்தான் போட்டிருக்கும் மார்டன் கெட்டப்புக்கு செட்டாகவில்லை.

நந்திதா, டிம்பிள் இருவரும் பிரபுதேவாவுக்கு நல்லது செய்வதாக நினைத்து பேய் ஓட்ட பயன் பட்டிருக்கின்றனர். பிரபுதேவாவுக்கு ஈடுகொடுத்து இருவரும் ஆஹா ஓஹோ… என ஆட்டம் போட்டிருக்கின்றனர். அஜ்மல் வரும்போதே இவர்தான் கடைசியில் வம்பிழுக்கப்போகிறார் என்று உள்மனதில் பட்சி சொல்கிறது. 

மொரிஷியஷின் எழில் முழுவதையும் அயனன்கா போஸ் அள்ளிவந்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையும் சோடையில்லை. முதல்பாகம் வரை திரைக்கதையை பக்கவாக தீட்டியிருக்கும் விஜய் இரண்டாம் பாதியில் திடீரென்று நடிகர்கள் விஜய், அஜீத், சூர்யா படங்களில் வரும் காட்சி களை கோர்த்து பேய் கதையை நகர்த்தால் வேகம் குறைந்துவிடுகிறது. இதற்கு பதில் வேறு களத்தில் காட்சிகளை தட்டிவிட்டிருக்கலாம். 10 நிமிடம் ஓடும் இக்காட்சிகளுக்குபிறகு மீண்டும் வேகமெடுக்கும் காட்சிகள் கிளைமாக்ஸ் வரை சூடுபிடித்துக்கொள்கிறது.

‘தேவி 2’  கலாட்டா பேய்கள்

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close