Trending Cinemas Now
விமர்சனம்

ஆக்‌ஷன் விமர்சனம்

ராணுவ அதிகாரி விஷாலின் தந்தை பழ.கருப்பையா, தமிழகத்தின் முதல்வர். அண்ணன் ராம்கி, துணை முதல்வர். இவரது மனைவி சாயாசிங் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார், விஷால். அவருடன் பணிபுரிந்து வரும் ராணுவ கமாண்டோவான தமன்னா, விஷாலை ஒருதலையாக காதலிக்கிறார். ராம்கியை தனது கட்சியின் அடுத்த இளம் தலைவராக அறிவித்து, தேர்தல் கூட்டணியை அமைக்கிறார் பழ.கருப்பையா. கூட்டணி கட்சியின் தேசிய தலைவர் ஒருவர், சென்னை பகுதியில் பொதுக்கூட்டத்துக்கு வந்த இடத்தில், பயங்கர குண்டுவெடிப்பில் அநியாயமாக பலியாகிறார்.

இதையடுத்து ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைவதால், அந்த குடும்பம் நிலைகுலைந்து போகிறது. ஐஸ்வர்யா லட்சுமி தனது கையில் எழுதியிருந்த கார் எண்ணை வைத்துக்கொண்டு, குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்களை தேடி வேட்டையாட கிளம்புகிறார், விஷால். லண்டன், இஸ்தான்புல், பாகிஸ்தான் என்று, அவரது உலக பயணத்தில் எதிரியை எப்படி வீழ்த்துகிறார் என்பது கதை.
இந்தப் படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.

குடும்பம் மற்றும் காமெடி கதையுள்ள படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி, ஹாலிவுட் பாணியில் அதிரடி ஆக்‌ஷன் படம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆக்‌ஷன் படம் என்றால் விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இதில் அதிக ரிஸ்க் எடுத்து, நிறைய அல்வா சாப்பிட்டு இருக்கிறார். படிகளில் பைக் ஓட்டுவது, மொட்டை மாடியில் தாவிக்குதித்து ஓடுவது, மலைகளில் சறுக்குவது, ஒரே நேரத்தில் பல எதிரிகளை பந்தாடுவது என்று, கருப்பு அர்னால்ட் போல் வந்து பொளந்து கட்டியுள்ளார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் கூட, மனதில் ஆழமாக பதிகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

அவர் கொடுக்கும் முத்தம், குட்டி ஹைக்கூ. அடிதடி காட்சிகளில் அதிரடிகள் செய்தாலும், தன் அழகு குறையாமல் பார்த்துக்கொள்கிறார் தமன்னா. வெளிநாட்டு வெயிலில் பளபளப்பாகமின்னுகிறார். புரொபஷனல் கில்லராக வந்து ஆக்‌ஷனில் மிரட்டும் அகன்ஷா புரி, கவர்ச்சியால் ஆடியன்சையும் போட்டுத்தள்ளுகிறார். சாயாசிங், குடும்ப குத்துவிளக்கு. காமெடி என்ற பெயரில், பேசியே கொல்கிறார் சாரா.

லண்டன் போர்ஷனில் வந்து கலக்கி விட்டு செல்கின்றார், யோகி பாபு. வழக்கமான உறுமல் வில்லனாக வருகிறார், கபீர் துஹான் சிங். ஹிப்ஹாப் தமிழா ஆதி அமைத்த பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளின் பிரமாண்டத்துக்கு ஈடுகொடுக்கவில்லை. ‘அழகே…’ பாடல் கவனம் ஈர்க்கிறது. டட்லியின் கேமரா மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறது. காடு, மலை, ஏரி, நகரம் என்று, ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம் தெரிகிறது.

ஒசாமா பின்லேடன் வேட்டை, ராஜீவ் காந்தி படுகொலை, மும்பை குண்டுவெடிப்பு, தாவுத் இப்ராஹிம் என, பல விஷயங்களை ஒரே படத்தில் சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி. தனிப்பட்ட முறையில் பழிவாங்கச் சென்ற விஷால், அதையே ராணுவ ரகசிய ஆபரேஷனாக மாற்றுவது மற்றும் ஜனாதிபதி விருது வாங்கும்போது கூட ரொமான்ஸ் செய்வது, தாதாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியா என்று சொல்லிவிட்டு; அதை முழுமையான போலீஸ் ஏரியாவாகவே காட்டுவது, சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்வது போல், ஹீரோ பல நாடுகள் சென்று வருவது என, மெகா சைஸ் லாஜிக் ஓட்டைகள். இந்த ஆக்‌ஷனில், வெறும் ஆக்‌ஷன் மட்டுமே.

Related posts

லைசென்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

சக்ரா (பட விமர்சனம்)

Jai Chandran

இது கதை அல்ல நிஜம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend