விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி (பட விமர்சனம்)

படம்:போதை ஏறி புத்தி மாறி
நடிப்பு: தீரஜ், பிரதாயினி, துஷாரா, மீரா மிதுன், ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், அஜய், மைம் கோபி, அர்ஜுன், ரோஷ, சரத், ஆஷிக், செந்தில் குமரன், சுரேகா வாணி, லிஸ்ஸி ஆண்டனி
தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர்
இசை: கேபி
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்
இயக்கம் சந்துரு கே.ஆர்

மறுநாள் கல்யாணம் நடக்கவிருக்கும் நிலையில் தீரஜ் தனது நண்பர்களை காணச் செல்கிறார். சென்ற இடத்தில் தண்ணி பார்ட்டி நடக்கிறது. ஒரு கட்டத்தில் தீரஜ் போதை மருந்து எடுத்துக்கொள்கிறார். போதை தலைக்கு ஏறி புத்தி மாறிய நிலையில் ஏடாகூடமாக நடந்துகொள்கிறார் தீரஜ். போதை மருந்து கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபடுகிறார் பத்திரிகையாளர் பிரதாயினி. கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் கமிஷனருக்கு இந்த விவரம் தெரியவர பிரதாயினியை எச்சரித்து வெளிநாடு செல்லும்படி கூறுகிறார். இந்நிலையில் தீரஜ் வீட்டில் பிரதாயினி கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். பிணத்தை பார்த்து கதறும் தீரஜ் அங்கிருந்து தப்பிக்க முயல அடுத்தடுத்து கொலைகள் நடந்தேறுகிறது. கொலைப் பழி சுமத்தப்பட்ட தீரஜ் சிறையில் அடைக்கப்படுகிறார். தண்டனை முடிந்து வெளியில் வரும் அவருக்கு பிரதாயினியை கொலை செய்தது கமிஷனர்தான் என்ற விவரம் தனது நண்பர் மூலம் தெரிய வருகிறது. அடுத்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதை எதிர்பாரதவகையில் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
புதிதாக ஒரு டீம் வித்தியாசமான கதைக்களத்துடன் களம் இறங்கியிருக்கிறது. ஆங்கில பட பாணியில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்துரு கேஆர். நல்ல பிள்ளைப்போல் வரும் ஹீரோ தீரஜ் திடீரென்று போதை மருந்தை மூக்கு வழியாக உறிஞ்சும்போது திடுக்கிட வைக்கிறார். நண்பர்கள் கூட்டமாக இருந்து அல்லோகல்லப் பட்ட அறையில் திடீரென்று யாருமே இல்லாமல் வெறிச் சோடி போவதும், பிரோவில் பிரதாயினி கொலை செய்யப் பட்டு கிடப்பதும் இதெல்லாம் எப்ப, எப்படி நடந்தது என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.
தனியாக அறையில் சிக்கிக்கொண்டு அலறும் தீரஜ் அங்கிருந்து தப்பிக்க முயலும்போது ஒவ்வொருவராக அவர் கண்முன் வருவதும், இறுதியில் போலீஸ் கமிஷனர் வந்து அவரை சுட்டுக்கொல்ல முயன்றதும் ஆத்திரம் அடைந்து அவர் மீது பாய்ந்து கழுத்தை இறுக்கிக்கொள்ளும்போது காட்சிகள் பரபரக்கிறது. சிறிது நேரத்தில் காட்சிகள் எல்லாம் மாறி இறந்தவர்கள் கண்முன் வருவதை கண்டு குழம்புவது தீரஜ் மட்டுமல்ல ஆடியன்ஸும்தான்.
போதை ஏறிய நிலையில் தீரஜ் கற்பனையில் நடப்பதுபோல் கொலை காட்சிகள் காட்டப்படுகிறது என்று இயக்குனர் புரியவைப்பதற்குள் ஒரு குழப்பம் அரங்கேறி முடிகிறது.
துஷாரா, பிரதாயினி இருவருக்குமே அதிக வேலை இல்லை. ஒரு சில காட்சிகள் என்றாலும் வாய்ப்பை பயன்படுத்தி யதார்த்தமாக நடித்து கவர்கின்றனர். நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் காது குடைச்சல் கம்மியாகியிருக்கும். காமெடிக்கென்று எந்த துரும்பும் கிள்ளிப்போடப்படவில்லை. காமெடியை வைத்தால் படத்தின் த்ரில் குறைந்துபோகும் என்று இயக்குனர் முடிவு செய்திருப்பார் போலிருக்கிறது.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு வழக்கமான கோணங்களில் அல்லாமல் மாற்று கோணங்களை அமைத்திருப்பது புதுமை. அதுவும் ஒவ்வொரு காட்சிக்கும் செய்திருக்கும் லைட்டிங் செட்டப் செம. கேபி இசையில் காட்சிகளில் த்ரில் எதிரொலிக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்திய யோகிபியின் போதை ஏறி புத்தி மாறி பாடலை படத்திலும் இணைந்திருந்தால் ரசித்திருக்கலாம்.
போதை மருந்து பயன்படுத்தினால் என்னவெல்லாம் அவதிப்பட வேண்டும் என்று இயக்குனர் மெசேஜ் கூறுவதற்காக போதை மருந்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக காட்டியிருக்க வேண்டிய தேவையில்லையே இயக்குனர் சார்.
போதை ஏறி புத்திமாறி- டென்ஷன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close