பொது செய்திகள்

பச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்

வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை, மதுரையில் சித்திரைத் திருவிழா சரித்திர புகழ் பெற்றது.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாபிஷேகமும், திக்கு விஜயமும். மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. நேற்று(ஏப் 29) தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
இந்நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (28-ந் தேதி) மாலை 6.15 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை, அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆடிப்பாடியும் வரவேற்றனர். பிறகு நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (ஏப் 30) அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு பச்சைபட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்கூட்டியே வீரராகவப் பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய காட்சியை காண பக்தர்கள் பல லட்சம்பேர் திரண்டிருந்தனர்.
பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டதுடன்.. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close