விமர்சனம்

பக்ரீத் (பட விமர்சனம்)

படம்:பக்ரீத்
நடிப்பு: விக்ராந்த், வசுந்தரா, ஷ்ருதிகா, மோக்லி, ரோகித் பதக்
தயாரிப்பு: எம்.எஸ்.முருகராஜ் மல்லிகா
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ஜெகதீசன் சுபு
இயக்கம்: ஜெகதீசன் சுபு

விவாசயம் செய்வதற்காக வங்கியில் லொன் கேட்டு செல்கிறார் விக்ராந்த். வங்கி அதிகாரி லோன் தர முன்வந்தாலும் நிலத்தை பண்படுத்த சிறுமுதலீடு செய்யச் சொல்கிறார். அதற்காக நண்பர் உதவியுடன் பாய் ஒருவரிடம் 1 லட்சம் கடன் கேட்டு செல்கிறார். பணப்பற்றாக் குறையால் கடன் தர இயலாத நிலையை பாய் விளக்கி சொல்லி விக்ராந்தை அனுப்பி வைககிறார். அதேநேரம் பாய் வீட்டுக்கு வரும் டிரக்கில் பக்ரீத் குர்பானிக்காக ஓட்டகம் ஒன்று கொண்டு வரப்படுகிறது. அதே ஓட்டகத்துடன் அதன் குட்டியும் சேர்த்து கொண்டு வந்ததால் கோபம் அடைகிறார் பாய். குட்டியை வைத்துக்கொண்டு தாய் ஒட்டகத்தை எப்படி குர்பானி தர முடியும் என்று ஆத்திரம் அடைகிறார். அதைப்பார்க்கும் விக்ராந்த் குட்டி ஒட்டகத்தை தன் வீட்டில் வளர்ப்பதாக கூறுகிறார். அதை ஏற்கும் பாய் அவரிடம் தருவதுடன் அவர் கேட்ட 1 லட்சம் கடனையும் தந்தனுப்புகிறார். தனது வீட்டில் வைத்து ஒட்டகத்தை பாசத்தோடு வளர்க்கிறார். விக்ராந்த் குழந்தையும் ஒட்டகம் மீது அன்புகாட்டுகிறாள். ஆனால் நம்மூர் உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துவராததால் ஒட்டகத்தின் உடல்நலம் பாதிக்கிறது. டாக்டர் அறிவுரைப்படி அந்த ஒட்டகத்தை மீண்டும் ராஜஸ்தானுக்கே கொண்டு சென்றவிட்டுவிட முடிவு செய்கிறார். அதற்காக ஒரு டிரக்கில் வாடகை பேசி ஒட்டகத்தை அழைத்துச் செல்கிறார். ராஜஸ்தான் செல்வதற்கிடையில் விக்ராந்த் சந்திக்கும்போராட்டங்கள் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. 
ஒட்டகத்தை வைத்து சர்க்கஸ் காட்டலாம் என்றெண்ணாமல் சென்டிமென்ட்டுடன் இப்படி ஒரு கதையை உருவாக்கலாம் என்று எண்ணம் தோன்றியதற்காகவே இயக்குனர் ஜெகதீசன் சுபுவுக்கு முதலில் ஒரு சல்யூட் செய்யலாம்.
ஆக்‌ஷன் ஹீரோ. காதல் ஹீரோ என்று விதவிதமான கதாபாத்திரங்களில் தன்னை நிலைநிறுத்த முயன்றுவரும் விக்ராந்த்தை ஒட்டக சென்டிமென்ட் வேடம் நிலையான ஒரு இடத்தை பிடித்துத் தந்திருக்கிறது. பறந்து பறந்து சண்டைபோடும் சுறுசுறுப்புடன் இருக்கும் விக்ராந்த் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு விவசாயியாக பயிர் செய்வதும். தந்தையாக குழந்தையிடம் அன்பு காட்டுவதும், இரக்கத்தின் இருப்பிடமாக ஒட்டகத்தின் மீது பாசம் பொழிவதுமாக பலவித பரிமாணங்களில் ஜொலித்திருக்கிறார். 
வேடத்தை புரிந்துகொண்டிருப்பதுடன் அதற்கு எந்தளவுக்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற மீட்டரையும் வரையறுத்துக்கொண்டிருப்பதுதான் விக்ராந்த் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஒட்டகத்தின் கழுத்தை தழுவிக்கொண்டு அதன் மீது விக்ராந்த் காட்டும் பாசமும், அதேபோல் விக்ராந்த் மீது கண்களால் பாசத்தை ஒட்டம் வெளிப்படுத்துவதும் இருவருக்கும் போனஜென்ம பந்தமோ என்று வரும்பாடல் வரிகள் உண்மைதானோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஒட்டகத்தை ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று விடுவதற்காக புறப்படும் விக்ராந்த்தின் அந்த நெடுஞ்சாலை பயணம் மிகவும் நீண்டது. போகிற வழியில் பசுகாவலர்கள் கைகளில் சிக்கிக்கொண்டு ஒட்டகத்தை பறிகொடுப்பதும் பிறகு அந்த ஒட்டகத்தை தேடி அலைவதுமாக நடிப்பு வேட்டையாடியிருக்கிறார் விக்ராந்த். ஒரு வழியாக 2500 கி.மீட்டர் நடந்தே சென்று ராஜஸ்தானை அடைந்து ஒட்டகங்கள் நிறைந்த பகுதியில் தனது ஒட்டகத்தை சேர்த்த நிம்மதியில் அங்கிருந்து புறப்பட தயாராகும்போது எதிர்பாராதவிதமாக அங்கு நடக்கும் திருப்பம் அதிர்ச்சியூட்டுகிறது.
விக்ராந்த் மகளாக வரும் பேபி ஷ்ருத்திகாவின் குழந்தைத்தனம் நெஞ்சை அள்ளுகிறது. ஒட்டகத்துக்கு சாரா என்று பெயர் வைத்து அதன் அருகில் அமர்ந்து கதைகள் சொல்வதும் சுகமான காட்சிகள். ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் விவசாயின் மனைவியாக, ஒரு குழந்தையின் தாயாக இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி வசுந்த்ராவா இது என்று ஆச்சர்யமூட்டுகிறார். 
டிராக் ஓட்டுனர், கிளீனர் கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை. ஒரு விவசாயிக்கு வங்கி அதிகாரி இப்படிக்கூட அன்புபாராட்டி கடன் தருவாரா? பலே… எல்லா அதிகாரியும் இப்படியிருந்துவிட்டால் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறார்கள்.
டி.இமான் இசையும் கதையோடு பயணித்திருப்பதால் பிரித்துப்பார்க்க முடியவில்லை.

பக்ரீத் மதம் சார்ந்த படமல்ல… மனம் கவரும் படம்.

 

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close