விமர்சனம்

நெடுநல்வாடை (பட விமர்சனம்)

படம்:நெடுநல்வாடை
நடிப்பு: பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், செந்தி, மைம் கோபி

தயாரிப்பு: பி ஸ்டார் புரடக்‌ஷன்

இசை:ஜோஸ்ப்ராங்க்ளின்

இயக்கம்: செல்வகண்ணன்

நெல்லை பகுதி சிங்கிலிப்பட்டி கிராமத்து விவசாயி பூ  ராம். இவரது மகள் செந்தி வீட்டைவிட்டு ஓடி சென்று திருமணம் செய்துகொள்கிறார். 2 குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு வாழ்வை தொலைத்தவராக மீண்டும் தந்தை ராமை தேடி வருகிறார். செந்தியை மீண்டும் ஏற்கக்கூடாது என்று அவரது அண்ணன் மைம்கோபி கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மகள் பாசம், பேரன், பேத்தி உறவுகளை இழக்கவிரும்பாத ராம் அவர்களை ஏற்கிறார். பேரன் இளங்கோவை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஊக்கம் தருகிறார் தாத்தா ராம். அவரும் அதன்படி படிக்கிறார். இளங்கோ வாழ்விலும் காதல் குறுக்கிடுகிறது. அஞ்சலி நாயர் அவரையே சுற்றி வந்து வம்பு செய்து பின் காதலியாகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்ய எண்ணுகின்றனர். ஆனால் நடப்பதோ வேறு. மனம்வெறுத்த இளங்கே வேலைக்காக வெளிநாடு செல்கிறார். மீண்டும் திரும்பி வராமல் அங்கேயே தங்கிவிடும் எண்ணத்துடன் இருக் கிறார். இதையறிந்த தாத்தா ராம், பேரன் ஞாபத்திலேயே படுக்கையில் விழுகிறார். இறக்கும் தருவாயிலிருக்கும் அவரை ஒருமுறை வந்து பார்க்கும்படி இளங்கோவிடம் கூறுகின்றனர். அதை ஏற்று இளங்கோ வந்தரா? காதலி அஞ்சலிநாயனர் என்னவானார் என்பதற்கு நடைமுறை யதார்த்ததுடன் விடை கூறியிருக்கிறது நெடுநல்வாடை.

பூ ராம் தாத்தா கதாபாத்திரத்திற்கு அவரைத்தவிர வேறுயார் அவ்வளவு பொருத்தமாக அமைந்து விடுவார்கள் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. பூ படத்தில் தனது யதார்த்த நடிப்பால் கவர்ந்த ராம் அந்த படத்தின் பெயரையே தனது பெயருக்கு முன் அடைமொழியாக கொண்டிருக் கிறார். அவரின் பண்பட்ட நடிப்பு இப்படத்திற்கு முதுெகலும்பாக உரம் சேர்க்கிறது. 

ஓரிருவரைத்தவிர முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில அறிமுக ஹீரோ இளங்கோவுக்கும், ஹீரோயின் அஞ்சலிநாயருக்கும் இதுதான் முதல்படம் என்பதை நம்பமுடியவில்லை. நடிப்பில் அவரவர் தரப்பில் யதார்த்தை அள்ளி இரைத்திருக்கின்றனர். தன்னையே சுற்றி சுற்றி வந்து வம்பிழுக்கும் அஞ்சலி நாயரை விரட்டும் இளங்கோவும், என்னதான் கிண்டல் செய்தாலும் இளங்கோவை மனதுக்குள் காதலிக்கும் அஞ்சலி நாயரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் நடிப்பில் போட்டிபோட்டுக்கொள்கின்றனர்.

அஞ்சலி நாயரை வாயாடியாகவே ஆக்கியிருக்கிறார் இயக்குனர். படபடவென அவர் பேசம் பேச்சு ஒரு கட்டத்தில் ஒடுங்கிப்போய் இளங்கோவை காதலில் ஏமாற்றியது ஏன் என்பதை கண்ணீர்மல்க கூறும்போது நெஞ்சுக்குள் ஒரு கனத்தை நிரப்புகிறார். ஒருபடத்தோடு மூட்டைக்கட்டிவிட்டு அவர் தற்போது விமான பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துவிட்டார் என்பது கோலிவுட்டிற்கு ஒரு அருமையான நடிகையை இழந்த இழப்பாகவே அமையும்.

தங்கை செந்தி, அவரது பிள்ளைகளை கண்டாலே எரிந்து விழும் மைம்கோபி இடைவேளைக்கு பிறகு காணாமல்போய்விடுகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை வட்டார வழக்கு செவிகளை குளிர வைக்கிறது. பொம்பள பிள்ளைய நான் என்ன தவிட்டுக்கா வாங்குனேன் போன்ற வசனங்கள் நெஞ்சில் பதிகிறது. 
தமிழ் இலக்கியத்தில் முக்கிய நூல்களில் ஒன்று பிரிவைப் பற்றி பேசும் நெடுநல்வாடை. இந்த தலைப்பு படத்துக்கு பொருத்தமான தேர்வு செய்த இயக்குனர் செல்வகண்ணனை கைகுலுக்கி பாராட்டலாம். முதல்பட இயக்குனர் என்றாலும் முத்திரைபதிக்கும் பதிவுகளுடன் கோலிவுட் களத்தில் கால் பதித்திருக்கிறார். அவரது திறமையை நன்கு அறிந்த 50 நண்பர்கள் இப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றிருக்கின்றனர். உதவிய கரங்களை பெருமை பட வைத்திருக்கிறார் செல்வகண்ணன்.

வைரமுத்துவின் வரிகளில் ஜோஸ் பிராங்க்ளின் இசை நடனமாடியிருக்கிறது. கருவா தேவா. ஏதோ ஆகி போச்சு, ஒரே ஒரு கண்பார்வை, தங்க காவடி என பாடல்கள் ஒவ்வொன்றையும் இசை இழையால் முத்துமாலையாக கோர்த்திருக்கிறார்கள். நெல்லை பகுதி கிராமங்களை இயற்கை வெளிச்சத்தில் கேமராகண்களுக்குள் அள்ளிவந்திருக்கிறார் கேமராமேன் வினோத் ரத்தினசாமி. 
நெடுநல்வாடை- சினிமா வரலாற்று பதிவில் இடம்பிடிக்கும்..

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close