விமர்சனம்

தேவராட்டம் (பட விமர்சனம்)

படம்:தேவராட்டம்

நடிப்பு: கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், போஸ் வெங்கட், பெப்சி விஜயன், சூரி
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இயக்குனர்: முத்தையா

ஊரில் கல்குவாரி நடத்தும் பெப்சி விஜயன் கட்டப் பஞ்சாயத்து ரவுடியாக வலம் வருகிறார். தன் ஒரே மகனுக்காக எதையும் செய்யத் துணிந்தவர். பிரச்சனை ஒன்றில் வேல ராமமூர்த்தியை கொன்று விடுகிறார். வேல ராம மூர்த்திக்கு 6 மகள்கள், ஒரே மகன் கவுதம் கார்த்திக். கைக்குழந்தையாக தாய், தந்தையை இழந்து நிற்கும் கவுதமை அக்காள்கள் 6 பேரும் சேர்ந்து வளர்க்கின்றனர். சட்டம் படிக்கும் கவுதம் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அவரை காதலிக்கிறார் மஞ்சிமா மோகன். இதற்கிடையில் பெண் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் பெப்சி விஜயனின் மகனுக்கும், கவுதம் கார்த்திக்குக்கும் மோதல் ஏற்படுகிறது. விஜயன் மகன் கொல்லப்படுகிறார். கோபம் அடையும் விஜயன், கவுதம் கார்த்திக்கின் குடும்பத்தையே அழிக்க துடிக்கிறார். கவுதமின் அக்கா-மாமாவை வெட்டித்தள்ளுகிறார். அதைக்கண்டு ஆவேசம் அடையும் கவுதம் கார்த்திக், பெப்சி விஜயனை பழிக்குபழி வாங்குகிறார்.

 பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கவுதம் கார்த்திக் என்று வந்திருக்கும் ஓரிரு படங்களில் தேவராட்டம் இடம்பிடிக்கும். இளமை ததும்பினாலும் தாடி, மீசையும் வைத்து முரட்டுத்  தனத்தை கொண்டுவர பார்த்திருக்கிறார் கவுதம். பெப்சி விஜயன், கவுதமை எங்கு கொன்று விடுவாரோ என்ற பயத்தில் அவரை வெளியூருக்கு அனுப்பி வைக்கின்றனர் குடும்பத்தினர். கவுதமை மீண்டும் ஊருக்கு வரவழைக்க கவுதமின் அக்காள், மாமாவை காய்கறி மார்க்கெட்டில் வைத்து வெட்டி அதை வாட்ஸ்அப்பில் கவுதமிற்கு அனுப்பி வைப்பது கொடுமை.
அக்கா, மாமா சாவதை கண்டு அதிரும் கவுதம் மீண்டும் ஊருக்கே திரும்பி வந்து அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளும்போது ஏதோ பெரிய விபரீதம் நடக்கப்போகிறது என்ற டென்ஷன் எகிறுகிறது. ஆனால் அதற்கு முன்பே பெப்சி விஜயனையும் அவ்ரது  ரவுடி கூட்டத்தையும் அழித்துவிட்டு கவுதம் வந்திருப்பதை பிளாஷ் பேக்கில் அதிரடி மோதல் விளக்கும்போது உடல் சிலிர்க்கிறது.

இனியும் அடல்ட் படங்களில் சிக்கிக்கொள்ளாமல் தந்தை கார்த்திக்கை போல் ரொமான்ஸ், ஆக்‌ஷன் காட்சிகள் கலந்த கதை அம்சம்கொண்ட படங்களை கவுதம் கார்த்திக் தேர்வு செய்வது நல்லது.
கவுதமின் காதலியாக வரும் மஞ்சிமா மோகனுக்கு அதிக வேலை இல்லை. உடல் எடை கூடியிருப்பதால் அவரது நடன அசைவிலும் நளினம் இல்லை. மொட்டை தலையுடன் பெப்சி விஜயன் செய்யும் வில்லத்தனத்தில் அனல் கொப்பளிக்கிறது. தனக்கே உரிய பாணியில் பெப்சி விஜயன் வில்லத்தனத் தில் அதிரிபுதிரி செய்கிறார். போஸ் வெங்கட், வினோதினி குணசித்ரத்தில் ஜொலிக்கின்றனர்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் கிராமத்து வாசம் வீசுகிறது. சக்தி சரவணின் தெளிவான ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணுக்குள் பதிய வைக்கிறது.
தேவராட்டம் பழிக்கு பழி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close