விமர்சனம்

தாதா 87 (பட விமர்சனம்)

 

படம்: தாதா 87

நடிப்பு: சாருஹாசன், சரோஜாகீர்த்தி சுரேஷ், ஆனந்த்பாண்டி. நாகராஜ், கதிர். பாலா சிங், மாரிமுத்து, ராகுல் தத்தா, விஜய்ஸ்ரீ ஜி, ஸ்ரீ பல்லவி.

தயாரிப்பு: கலைசெல்வன்
இசை: லியாண்டர் லீ மார்ட்டி, அல் ரபன், தீபன் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு: ராஜபாண்டி
இயக்கம்: விஜய்ஸ்ரீ ஜி

அர்த்தமுள்ள கதைகளுக்கும் அடிதடி தாதா டைட்டில் வைத்தால்தான் எடுப்படும் என்ற நிலைமை இன்றைய காலகட்டம் மாறியிருக்கிறது என்பதுதான் இப்படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு எழும் எண்ணமாக இருக்கிறது. 
தொகுதிக்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு ஊர் எம்எல்ஏவும், அவரது அடியாட்களும் பஞ்சாயத்து செய்து வைக்கின்றனர். அப்பகுதிக்கு புதிதாக குடியேற வரும் ஜனனியை பார்த்து காதல் கொள்கிறான் ஜெயில் பாண்டி. ஆரம்ப கட்டத்தில் அதை ஏற்க மறுக்கும் ஜனனி ஒரு கட்டத்தில் அந்த காதலை ஏற்கிறார். அதே சமயம் ஜனனியை பற்றிய உண்மை தெரியவர அதிர்ச்சியாகி றான். காதலை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே தலையை பீய்த்துக்கொண்டு அலைகிறார் ஹீரோ. குழப்பத்துக்கு மேல் குழப்பம் என்று காட்சிகள் அடுக்குதொடர்போல் வலம் வந்தாலும் முதிர்ச்சியான கிளைமாக்ஸ் தந்து அப்ளாஸ் அள்ளகிறார் இயக்குனர்.

முதல்பாதி படம் முடியும் வரை தாக்குபிடித்துவிட்டால் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளாமல் அரங்கிலிருந்து யாரும் எழுந்து போக முடியாது. 30 வருடங்களுக்கு பிறகு சத்யா வருகிறார் என்றதும் தாதா வேடத்தில் சாருஹாசன் முறைப்பும், விரைப்பும் காட்டுகிறார். கமல் அந்தகாலத்தில் நடித்த சத்யா படத்தின் தொடர்ச்சிதான் சாருஹாசன் கதாபாத்திரம் என்ற போதிலும் 87 வயதில் இப்படித்தான் நடிக்க முடியும் என்று சொல்லி ஒதுங்கிவிடாமல் இயக்குனர் கேட்டதைப்போலவே நடித்து நிறைவு செய்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் வயதுக்கேற்ற பண்பட்ட  வேடத்தை குறை ஒன்றுமில்லாமல் செய்து முடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனகராஜூம் கனமான குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து கண்களில் நீர் பொங்கச் செய்கிறார்.
மூத்த ஜோடியின் காதல் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு புறம் ஜெயில் பாண்டியாக வரும் ஆனந்த் பாண்டி, அவரது நண்பர் கதிர் ஆகியோரின் இளவட்ட காதல் துள்ளல் போடுகிறது. 
ஹீரோயின்கள் யாரும் ஏற்க துணியாத கதாபாத்திரத்தில் ஸ்ரீபல்லவி நடித்திருப்பது கைகுலுக்கி பாராட்டத்தக்கது. இப்படியொரு கதாபாத்திரத்துக்கு இப்படியொரு காதல் வந்தால் சமூகம் எப்படி பார்க்கும், அந்த பெண்ணை காதலன் எப்படி பார்ப்பான் என்பதை நன்றாகவே அலசியிருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி. 
மகள் ஸ்ரீபல்லவியை பற்றி கவலைப்படும் ஜனகராஜ் உணர்ச்சிகரமாக நடித்து நெஞ்சங்களை அள்ளுகிறார். பாலா சிங், மாரிமுத்து, மணிமாறன் கதாபாத்திரங்கள் கதையோடு ஒட்டவில்லை. ஆனந்த பாண்டியோடு ஒட்டிக்கொண்டு காமெடி செய்யும் கதிர் சில இடங்களில் சிரிக்க வைக் கிறார்.

இசை காட்சிகளோடு ஒன்றிப்போயிருப்பதால் அது அழகோடு சேர்ந்து அழகாகி விடுகிறது. கேமரா கோணங்கள் ஓகே ஆனால் பளிச்சென காட்டாமல் கவுபாய் படங்கள்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.. 
கிளைமாக்ஸ் காட்சியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் காதல் ஜோடிகளை இணைத்து வைக்கும்போது ஒரு மவுன புரட்சி அரங்கு முழுவதும் ஆக்ரமிக்கிறது.

தாதா 87- புதுபுரட்சி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close