விமர்சனம்

ஜூலை காற்றில் (பட விமர்சனம்)

நடிப்பு: அனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்த மேனன், சதீஷ்
தயாரிப்பு: சரவணன் பழனியப்பன்
இசை: ேஜாஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு: டைல் சேவியர் எட்வர்ட்ஸ்
டைரக்‌ஷன்: கேசி.சுந்தரம்

வழக்கமான காதல் கதை என்றில்லாமல் மேற்கத்திய டேட்டிங் பாணி கதையாக உருவாகி யிருக்கிறது ஜூலை காற்றில். கண்டவுடன் காதல் என்பதெல்லாம் அந்த காலத்து பாணியாகிப்போனது…. காதலுக்கு முன்பாக டேட்டிங் என்ற இன்னொரு புது அத்தியாயத்தை இந்த காலத்து இளவட்டங்கள் உருவாக்கியிருப் பதை அப்பட்டமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தரம். 
ஐடி கம்பெனியில் விற்பனைபிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறார் அனந்த் நாக். பள்ளியில் டீச்சராக பணியாற்றும் அஞ்சு குரியனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவருடன் டேட்டிங் செய்கிறார். இருவீட்டு பெரியவர்களும் சந்தித்து அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்கின்றனர். ஏதோ ஒரு விஷயம் அனந்த்நாக் மனதிற்கு பிடிக்காததால் அஞ்சுவிடமிருந்து விலகி செல்கிறார். திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அவரிடம் பிரேக்அப் செய்து கொண்டு வேறுவொரு பெண்ணுடன் நட்பு கொள்கிறார். ஜாடிக்கேத்த மூடிபோல் அனந்த் நாக்கிற்கு ஏற்ப சம்யுக்தாவும் டேட்டிங், சாட்டிங் என்று அவருடன் பொழுதை கழிக்கிறார். இவர்களது டேட்டிங் கட்டில்வரை நீள்கிறது. சம்யுக்தாவை மிகவும் நேசிக்கும் அனந்த்நாக் அவர் மற்ற பாய்பிரண்ட்ஸுடன் பேசுவதை ஏற்க மறுக்கிறார். இது சம்யுக்தாவிற்கு பிடிக்கவில்லை. பொறுத்துப் பார்த்தவர் திடீரென்று அனந்த்நாக்கிடம் பிரேக் அப் செய்துகொண்டு விலகுகிறார். மனதளவில் பாதித்த அனந்த் நாக் அமைதி தேடி கோவா செல்கிறார். அங்கு கடற்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளப் பெண்ணிடம் பழக தொடங்குகிறார். அவரோ அனந்த்நாக் எண்ணத்தை புரிந்துகொண்டு குட் பய் சொல்வதுடன் அட்வைஸ் செய்து அனுப்புகிறார். புதுமனிதனாக திரும்பி வருகிறார் அனந்தநாக். தனது பழைய காதலிகளை தொடர்புகொண்டு தான் மனம் திருந்திவிட்டதாக கூறுகிறார். ஒரு கட்டத்தில் சம்யுக்தாவை தேடிக் கொண்டு இலங்கைக்கே செல்கிறார். திடீரென்று அனந்த்நாக் கண்ணெதிரே வந்து நிற்பதை கண்டு ஆச்சர்யம் அடையும் சம்யுக்தா அவரை வரவேற்றாலும் என்னதான் நீ முயற்சி செய்தாலும் மீண்டும் உன்னை காதலிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று கைகழுவிவிட்டு நகர்கிறார். அதன்பிறகு சம்யுக்தாவின் தோழியிடம் நெருக்கம் காட்டத் தொடங்குகிறார் ஹீரோ. இந்த டேட்டிங் முடிவில்லாமல் தொடர்கிறது…

இந்த காலத்துக்கு இப்படியொரு படம் தேவைதான் என்று கூறும் அளவுக்கு ஒரு கதையை லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சுந்தரம். இந்த நடிகர் அந்த நடிகையுடன் டேட்டிங் செய்தார், அந்த நடிகை இந்த நடிகருடன் டேட்டிங் செய்தார் என்று தினமும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தைபற்றி தவறாமல் செய்தி வருகிறது. அதென்ன டேட்டிங் என்று கேட்கும் அப்பாவி இளைஞர்களுக்கு இப்படம் சரியான பாடம் நடத்துகிறது.
அனந்த்நாக், அஞ்சு குரியன் காதல் ஜோடி பொருத்தம் நன்றாகவே இருக்கிறதே என்று யோசித்து முடிப்பதற்குள் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தத்தை குடும்பத்தினர் செய்து வைக்கின் றனர். அடுத்து குடும்பம். குழந்தை குட்டி என கதை நகரும் என்று கணக்குபோட்டால் திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அஞ்சுவிடம் பிரேக் அப் சொல்லும் ஹீரோ அனந்த்நாக் ஆச்சர்யப்பட வைக்கிறார். அடுத்த சில நாட்களில் சம்யுக்தாவுடன் அவர் டேட்டிங் ஆரம்பித் ததும் இந்த ஜோடி எத்தனை நாளைக்கோ என்று அரங்கில் முணுமுணுப்பு எழுகிறது. 
ஐந்தாறு சம்பவங்களுக்கு பிறகு திடீரென்று அனந்தநாக்கிடம் சம்யுக்தா பிரேக் அப் சொல்வது ஹீரோவுக்கு இப்படித்தான் வேண்டும் என்று மனசு சொல்லும் அதேவேளையில் இப்படித்தான் நடக்கும்னு சொன்னேல்ல என்று ஆங்காங்கே ரசிகர்களுக்குள் தங்களது யூகத்தை வலியுறுத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. 
ஹீரோவாக தோன்றும் அனந்தநாக் பிரேக் அப் விளையாட்டால் ஒரு கட்டத்தில் காமெடியன் போலவே காட்சி தருகிறார். சதீஷ் மன்னிச்சு.. உங்களுக்கு ஹீரோவே போட்டியாயிட்டார் என்ன செய்ய…
அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன் இருவருமே ஏற்ற வேடத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர். குறிப்பாக சம்யுக்தா கொஞ்சம் ஓவர் டோஸ் விளையாட்டு காட்டுகிறார். காதலன் அனந்தநாக் கண்முன்பே மற்றொரு ஆண் நண்பரை கட்டிப்பிடித்துக்கொள்வதெல்லாம் சினிமாத்தனமாகவே இருக்கிறது. 
கோவா எபிசோட் இளசுகளின் கண்களுக்கு விருந்து. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் கேட்க முடிகிறது. 
இந்த காலத்து இளசுகளின் மனதை படம் பிடித்திருக்கும் இயக்குனர் இதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை குடும்பத்தினர் பார்த்து முறைப்படி நடத்தி வைக்கும் கல்யாணம்தான் நிலைத்திருக்கும் என்று கருத்தையாவது சொல்லியிருக்கலாம். முடிவே சொல்லாமல் டேட்டிங்… டேட்டிங்… என்று டேட்டிங்கிலேயே கிளைமாக்ஸை முடித்துவிடுகிறார். 
‘ஜூலை காற்றில்’ டேட்டிங் ஷோ..

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close