விமர்சனம்

செவன் (பட விமர்சனம்)

படம்:செவன்

நடிப்பு: அவிஷ், ரகுமான், ரெஜினா, நந்திதா, அதிதி ஆர்யா, அனிஷா அம்புரோஸ், புஜிதா, திரிதா சவுத்ரி
தயாரிப்பு: ரமேஷ் வர்மா
இசை: சைதன் பரத்வாஜ்
ஒளிப்பதிவு நிசார் ஷபி
இயக்கம்: நிசார் ஷபி

ஐடி கம்பெனியில் பணிபுரியும் அவிஷுக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் நந்திதாவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் அவிஷ் காணாமல்போகிறார். கணவரைக் காணவில்லை என்று போலீஸ் அதிகாரி ரகுமானிடம் புகார் தரும் நந்திதா, தனக்கும் அவிஷுக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்று கூறுகிறார். திடீரென இடைமறிக்கும் ரகுமான் மீதி கதையை நான் சொல்கிறேன் என்று மற்ற சம்பவங்களை கூறிமுடித்து உன்னைப்போலவே இன்னொரு பெண்ணும் தன் கணவனை காணவில்லை என்று அவிஷ் பற்றி புகார் கொடுத்திருக்கிறார் என அதிர்ச்சி தருகிறார். அதேபோல் மேலும் 2 பெண்கள் அவிஷை காணவில்லை கண்டுபிடித்து தரும்படி புகார் தருகின்றனர். குழப்பம் அடையும் ரகுமானும் போலீஸ் குழுவும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர்தான் அவிஷ் என்று முடிவுக்கு வந்து அவரை தேடத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் அவரை போலீஸ் கண்டுபிடித்து கைது செய்யும்போது தன் மீது புகார் கொடுத்தவர்களில் ஒருவர்தான் என் மனைவி மற்றபடி நந்திதா உள்ளிட்ட  யாரையுமே எனக்கு தெரியாது என்று புதிர்போடுகிறார். அவிஷ் மீது நந்திதா மற்றும் இளம் பெண்கள் புகார் அளித்தது ஏன்? அவரை ஒரு கூட்டம் கொல்ல அலைவது எதற்காக என்பதற்கு அதிர்ச்சி தரும் வகையில் பதில் சொல்கிறது கிளை மாக்ஸ்.

த்ரில்லர் கதை என்பதால் தொடக்கமே ஒருவித பதற்றத்தோடு ஆரம்பிக்கிறது. கொட்டும் மழையில் போலீஸ் நிலையத்துக்கு வந்து கணவரை காணவில்லை என்று நந்திதா புகார் கொடுக்கும் ஆரம்ப காட்சியிலிருந்தே ரசிகர்களை கதைகளத்துக்குள் இறக்கிவிட்டிருக்கிறார் இயக்குனர். நந்திதாவின் காதல் கதை பட்டாம்பூச்சியாக விரிகிறது. திடீரென்று அவருடன் சண்டைபோட்டுக்கொண்டு அவிஷ் காணாமல் போனதும் சஸ்பென்ஸ் தொடங்கி விடுகிறது. அடுத்தடுத்து அவிஷ் மீது பெண்கள் புகார் கொடுப்பதும் அவர்களை அவிஷ் காதலிக்கும் காட்சிகளும் இளமையும், திகிலும் கலந்த நகர்வுகள். இடைவேளைக்கு பிறகு வரும் ரெஜினா, அவிஷ் காதலிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து தெளிவாக குழப்பியிருக்கிறார் இயக்குனர்.

வித்தியாசமான பாத்திரம் என்று சில நடிகைகள் சொல்வதை படங்களில் பார்க்கும்போது உப்பு சப்பில்லாமல் இருக்கும். இப்படத்தில் ரெஜினாவின் பாத்திரம் உண்மையிலேயே வித்தியாச மாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவரும் இதுவரை இப்படி நடித்ததில்லை என்றே சொல்லலாம். அவரது கதாபாத்திரத்துக்கான சஸ்பென்ஸை இங்கு உடைத்தால் படம்பார்க்கும்போது சுவாரஸ் யம் அடிபட்டுவிடும். 

படத்தின் கிளைமாக்ஸ் எதிர்ப்பார்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் பாத்திரப் படைப்போடு ஒட்டிபோகாததால் காமெடியாகிவிடுவது பெரிய குறை.  கேமராமேன் நிசார் ஷபி முதன்முறையாக இயக்குனர் ஆகியிருக்கிறார். முதல் இயக்கமே பேச வைக்கும்வகையில் அமைத்திருப்பது நல்ல துவக்கம். 

செவன்- சஸ்பென்ஸ் த்ரில்லர்.

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close