விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் (பட விமர்சனம்)

படம்: சூப்பர் டீலக்ஸ்
நடிப்பு: விஜய்சேதுபதி, பஹத் பாசில், பக்ஸ், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன்,
தயாரிப்பு: டைலர் டுர்டன் மற்றும் கினோ பிஸ்ட்
ஒளிப்பதிவு:பி.எஸ்.வினோத், நீரவ் ஷா
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: தியாகராஜன் குமாரராஜா

சில படங்கள் பிரமாண்டத்தை அள்ளிக்கொண்டும். சில படங்கள் திகிலை அள்ளிக்கொண்டும். இன்னும் சில படங்கள் பாசத்தையும், மசாலாவையும் அள்ளிக்கொண்டு வந்து வீசும். வாழ்க்கை யின் யதார்த்தத்தை தத்ரூபமாக சித்தரிக்கும் சித்திரங்கள் எப்போதாவது ஒருமுறைதான் வரும். அப்படியொரு படமாக வந்திருக்கிறது சூப்பர் டீலக்ஸ். இது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை கதை அல்ல. பலரின் வாழ்க்கை நிஜம். 
விஜய்சேதுபதிக்கு எந்நேரமும் பெண்மை உணர்வு அதிகரிக்க ஆபரேஷன் செய்து தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொள்கிறார். மகன் மீதுள்ள பாசத்தில் அவனையே கூட்டிக்கொண்டு சுற்றுகிறார். போலீஸால் விஜய் சேதுபதிக்கு பிரச்னை வருகிறது. ரம்யா கிருஷ்ணன் பலான பட நடிகையாக நடிக்கிறார். தனது மகன் உயிருக்கு போராடும்நிலையில் அவனை மருத்துவ மனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைக்க படாதபாடுபடுகிறார். மற்றொரு ஜோடி பஹத் பாசில். சமந்தா  தங்களது பிரேக் அப் காலத்தை நெருங்கும் நேரத்தில் இருவரும் கொலை வழக்கில் சிக்கிகொள்கின்றனர். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க நரிபோல் தந்திரம் செய்கிறார்கள். இளைஞர்கள் சிலர் திருட்டுத்தனத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஒரு பாடம் நடக்கிறது. இவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையையும் ஒருபுள்ளியில் இணைக்கிறது இப்படத்தின் கிளைமாக்ஸ்.

விஜய்சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யாகிருஷ்ணன் என 4 பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பதால் யாருக்கு வெற்றிகோப்பை தருவது என்பதில் திணறடித்திருக்கிறார்கள். முதலிடத்தை தட்டிச் செல்கிறார் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஹீரோவும் துணிய மாட்டார்கள். அந்தவொரு துணிச்சலுக்காக மட்டுமல்ல, திருநங்கை கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கை எப்படியெல்லாம் இன்னலுக்கும், ஏச்சுக்கும் ஆளகிறார் என்பதை அந்த பாத்திரமாகவே வாழ்ந்து சித்தரித்துகாட்டியதற்காக விஜய்சேதுபதியை தலைமீது வைத்து கொண்டாடலாம். நடை, உடை, பேச்சு, பாவனை ஏல்லாமே ஒரிஜினல், அதேபோல் மகன் மீது அவர் காட்டும் பாசம் கண்களை குளமாக்கு கிறது. 
மகன் காணாமல்போனதை போலீசிடம் புகார் தரச் சென்று அங்கிருக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பக்ஸின் சிலுமிச தொல்லையில் சிக்கி திணறி, வேண்டாம் சார்… விட்ருங்க சார் என்று கெஞ்சும்போதும் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து, பக்ஸை எட்டிமிதித்து ரணகளம் செய்வது அதகளம். 
மகன் திடீரென்று காணாமல் போய்விட எங்கு தேடியும் கிடைக்காமல் சோர்வாக வீட்டுக்கு திரும்பியதும் அந்த இடத்தில் மகன் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் ஓடிச் சென்று அவனுக்கு முத்தழை பொழியும்போது பெண்மைக் கும் மேலாக பாசம் காட்டுகிறார் விஜய்சேதுபதி. இவருடன் போட்டியே வேண்டாமென்று ஒரு ஓரமாக நின்று கண்ணீர் சிந்தி  மனைவி என்ற தனது கதாபாத்திரத்தை தக்கவைத்தக்கொள்கிறார் காயத்ரி.
பஹத் பாசில், சமந்தா மற்றொரு வித்தியாசமான ஜோடி. தனது பழைய நண்பனை வீட்டுக்கு வரவழைத்து அவனுடன் உறவு கொள்வதும் அந்தநேரத்தில் அந்த நபர் இறந்துவிட அதிர்ச்சி அடைகிறார் சமந்தா. கணவர் பஹத் பாசில் வந்ததும் படுக்கையிலிருக்கும்போது மாஜி காதலன் இறந்துவிட்டான் என்று வெளிப்படையாக பேசி பெரியதொரு சந்தேக பிரச்னைக்கு இடம்தராமல் வசனத்தால் காட்சியை எடிட்டிங் செய்திருக்கிறார் இயக்குனர். 
பிணத்துடன் போலீஸில் சிக்கிக்கொள்ளும் சமந்தாவை அங்குவரும் பக்ஸ் ‘உங்களை தப்பிக்க விட வைக்கமென்றால் சமந்தா என்னிடம் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும்’ என்று அவரை படுக்கைக்கு அழைத்ததும் அதற்கு சம்மதிக்காமல் சமந்தா துடியாய் துடித்து கதறும்போது…. இந்த காட்சியை எப்படித்தான் இயக்குனர் முடிக்கப்போகிறாரா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அக்காட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து சபாஷ் போட வைக்கிறார்.
டிவியை உடைக்கும் 4 இளைஞர்கள் சேட்டு வீட்டில் பணம் திருடி டிவியை வாங்கி தர செய்யும் விஷயங்கள் கதைக்களத்தை வேறு எங்கோ கொண்டு செல்கிறது. அந்த இடத்துக்கு ஒரு பெண் வர அந்த பெண்ணும் ஒரு ஏலியன் (வேற்றுகிரகவாசி) என்று தெரியும்போது அதிர்ச்சி அடைவது இளைஞர்கள் மட்டுமல்ல ஆடியன்ஸும்தான். கதைக்கு சம்பந்தமில்லாத காட்சியைும் கதை யோடு இணைய விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். 
ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்தை அவரைப்போன்று பெண்கள் மத்தியில் இமேஜ் உள்ள வேறு எந்த நடிகையும் ஏற்க நிச்சயம் துணியமாட்டார்கள். இமேஜ் வேறு, கதாபாத்திரம் வேறு என்று பகுத்துப்பார்க்கும் ஒருவரால்தான் இப்படி நடிக்க முடியும். ஆபாச நடிகையாக தான் நடித்த பலான படத்தை மகன் பார்த்துவிட்டான் என்பதை தெரிந்து கொண்ட நிலையிலும் பதற்றமே இல்லாமல், அதுபோன்ற படத்தைபார்ப்பதற்கு பலபேர் இருக்கும்போது அப்படி நடிப்பதற்கு நாலுபேர் இருக்கத்தானே செய்வார்கள்…’ என்று தெளிவான ஒரு கருத்தை பதிய வைப்பதன் மூலம் தெரியாமல் தவறு இழைத்த பெண்களுக்கு ஒரு பெரிய ரிலீஃப் தரும் அர்த்தமுள்ள வசனம். இந்த இடத்தில் அப்ளாஸ் எதிரொலிக்கிறது. படையப்பா நீலம்பரிக்கு எப்படி பொருத்தமானவராக அமைந்தாரோ அதேபோல் இந்த கதாபாத்திரத்துக்கும் பொருத்தமானவராக அமைந்துவிட்டார் ரம்யா கிருஷ்ணன். 
இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் விலகி ஓடிய நதியாவே இந்த படத்தை பார்த்தால்கூட நிச்சயம் பாராட்டவே செய்வார். 

மிஷிகின் ஏற்றிருக்கும் கிறிஸ்தவ மதபோதகர் வேடம் இதுவரை திரையில் தோன்றாத அற்புதம். மகனை காப்பாற்ற வேண்டி சிலை முன் ஆண்டவரே ஆண்டவரே என பிரார்த்தனை செய்யும்போது அவரது வேகத்துக்கு ஈடு அவரால்தான் கொடுக்க முடியும்.
 இடத்துக்கு ஏற்ப பின்னணி இசையை பொருத்தியிருக்கும் யுவன்சங்கர்ராஜாவும் கைதேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒளிப்பதிவு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது. 
இயக்குனர்கள் பலவிதம் அவர்களில் இவர் ஒருவிதம் என்பதை ஏற்கனவே ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தெளிவாக புரிய வைத்த தியாகராஜன் குமாரராஜா இப்படத்தில் ஒவ்வொரு எபிசோடையும் ஒவ்வொரு திரைப்படமாகவே எடுக்க முடியும் என்கிற அளவிற்கு கதையை பொத்தி வைத்திருக்கிறார். இதுபோன்ற படங்கள் எப்போதும் வந்துக்கொண்டிருக்காது எப்போதாவது ஒருமுறைதான் வரும். அதில் நடிக்க நட்சத்திரங்களும் தங்களின் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது விமர்சகளின் கோரிக்கையாக முன்வைக்கப் படுகிறது. என்னவொன்னு கெட்டவார்த்தைகள் சகட்டுமேனிக்கு வந்து விழுகிறது.

சூப்பர் டீலக்ஸ் – மூலக்கூறுகளின் உருவம்தான் மனிதன் என்பதுபோல் அத்தனை மனிதர்களின்  மூலக்கூறுகளாக இருப்பதுதான் பிரபஞ்சம் என்ற புதுதத்துவத்தை உணர்த்துகிறது. 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close