விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை (பட விமர்சனம்)

படம்:சிவப்பு மஞ்சள் பச்சை
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், சித்தார்த், விஜிமோள் ஜோஸ், காஷ்மிரா
தயாரிப்பு: அபிஷேக் பிலிம்ஸ்
இசை: சித்துகுமார்
இயக்கம்: சசி

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த ஜி.வி.பிரகாஷ்குமார் அவரது அக்கா விஜிமோள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசம் கொட்டி வளர்கின்றனர். பிரகாஷ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரேஸ் ஓட்டி அடிக்கடி வம்பில் சிக்குகிறார். ஒருமுறை பைக் ரேஸ் ஓட்டும்போது டிராபிக் போலீஸ் சித்தார்த் நிறுத்தச் சொல்லியும் மதிக்காமல் செல்கிறார். அவரை துரத்தி செல்லும் சித்தார்த் கைது செய்து நைட்டி அணிவித்து தெருவில் அழைத்துச் செல்கிறார். அந்த காட்சியை வீடியோவிலும் பதிவு செய்கிறார். இதனால் அவமானமும் கோபம் அடையும் பிரகாஷ், சித்தார்த் மீது கடும்கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில் தனது அக்காவுக்கு உறவுக்காரர் மூலமாக சித்தார்த்தை மாப்பிள்ளை பார்க்கின்றனர். இதையறிந்து கோபம் அடையும் பிரகாஷ், சித்தார்த்தை மணக்க வேண்டாம் வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று கூறி வேலை மாபிள்ளை தேடுகிறார். யாரும் பொருத்தமாக அமையவில்லை. இந்நிலையில் பிரகாஷின் காதலி காஷ்மீரா நடந்த விஷயங்களை அறிந்து சித்தார்த்துடன் வுஜிமோளை சேர்த்து வைக்கிறார். ஒரு வழியாக திருமணம் நடக்கிறது. கோபத்தில் அக்காவைவிட்டு தனியாக இருக்கும் பிரகாஷ் மீண்டும் பைக் ரேஸில் கலந்துகொள்கிறார். அவர் மீது செயின் பறிப்பு பழி விழுகிறது. பிரகாஷை மீட்டு செல்ல வரும் சித்தார்த் தனது பொறுப்பில்ஜாமீனில் அவரை வீட்டுக்குஅழைத்து வருகிறார். வேண்டா வெறுப்பாக வரும் பிரகாஷ் சித்தார்த் வீட்டில் தங்கினாரா? இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்ததா என்ற கேள்விகளுக்கு படம் பதில் சொல்கிறது.

சித்தார்த், ஜிவி.பிரகாஷ்குமார் புதுகாம்பினேஷனில் மாமன் மச்சான் ரகளையாக கதைக்களம் மாறுபட்ட விதத்தில் கதை பயணிக்கிறது. தொடக்கத்திலேயே பைக் ரேஸில் பறக்கும் பிரகாஷ் நடிப்பிலும் வேகத்தை அதிகரித்திருக்கிறார். அக்கா விஜிமோள் உடன் சகோதர பாசத்தை மனதார வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கடையில் நிற்கும் விஜிமோளை ஒரு வாலிபர் சைட் அடிக்க அவர் முகத்தில் அடிகொடுத்து விரட்யடிக்கும் நயமாகட்டும், அக்கா சுட்டுத்தரும் சின்ன சின்ன தோசையை ருசிப்பதாகட்டும் என  சென்டிமென்ட் காட்சிகள் அடுக்கிக்கொண்டே போகிறது.

சித்தார்த்துடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் பிரகாஷ் அவரை சந்திக்கும்போதெல்லாம் வெறுப்பை கக்குவது, . ஒரு கட்டத்தில் சித்தாத்தின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி தரையில் உருண்டு புரள்வதும், துப்பாக்கி எடுத்து சுட்டு வீழ்த்த பார்ப்பதுமாக திடுக்கிடும் விறுவிறுப்புடன் கதாபத்திரத்தின் கோபத்தை ஆவேசமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ்.

சித்தார்த், பிரகாஷ் மோதல் அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மோதலை நினைவுபடுத்துகிறது. கடைசி வரையில் இந்த டென்ஷனை இயக்குனர் கொண்டு சென்றிருப்பதுதான் சரியான டெக்னிக். உடலை இறுக்கிபிடிக்கும் டிராபிக் டிரஸ் அணிந்து டிப்டாப்பாக வருகிறார் சித்தார்த். துள்ளலான நடிப்பை பிரகாஷ் வெளிபடுத்தும்போது கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியி ருக்கிறார் சித்தார்த். பிரகாஷின் கோபத்தை தணிக்க பல வழிகளில் இறங்கி வந்து ஏன் சின்னச்சின்ன தோசை சுட்டுக்கொடுத்து நைஸ் காட்டுவது நகைச்சுவையும், பாசப்பிணைப்பும் காட்டும் அருமையான காட்சிகள். டிராபிக் போலீஸாக இல்லாமல் திடீரென்று வில்லன் கூட்டத்தினரின் போதை பொருள் கடத்தலில் தலையிட்டு அவர்களுடன் மோதலுக்கு நிற்பதுமாக வேடத்தை சமன் செய்திருக்கிறார்.

பிரகாஷின் அக்காவாக நடித்திருக்கும் விஜிமோள் சில சமயம் தாய்க்கும மேலாக தம்பி மீது பாசம் காட்டுவது மனதை நெகிழ வைக்கிறது. பிரகாஷின் காதலியாக வரும் காஷ்மீராவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் இல்லை என்றாலும் வயதுக்கு ஏற்ற குறும்பும், காதலும் செய்கிறார்.

ஆக்‌ஷன் படம், பேய் படங்கள் எடுப்பதற்கு பல இயக்குனர்கள் இருந்ததலும் பாசத்தையும், குடும்ப உறவையும் படமாக்குவதற்கான இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் சசி. மாமன் மச்சான் உறவை அழுத்தமாக சொல்லும் கதையாக அமைத்திருக் கிறார். குடும்ப உறவை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் வேலைக்காது என்பதையும் புரிந்துகொண்டு பைக் ரேஸ் என்ற ஆக்‌ஷன் எபிசோடையும் சேர்த்து சுவைபட படத்தை தந்திருக்கிறார்.

யதார்த்தத்துடன் கதையை கிளைமாக்ஸ் வரை நகர்த்தி செல்லும் சசி கிளைமாக்ஸில் சினிமா ஸ்டண்ட்டை புகுத்தி பொறுமை இழக்க வைத்திருக்கிறார். குண்டடிபட்டு கிடக்கும் சித்தார்த், கத்தி குத்துபட்ட பிரகாஷ் இருவரையும் யார் மீட்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்பதற்கு பதில் இல்லை.

சிவப்பு மஞ்சள் பச்சைக்கு ரசிகர்களிடம் கிரீன் சிக்னல் கிடைக்கும்.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close