விமர்சனம்

சிந்துபாத் (பட விமர்சனம்)

படம்: சிந்துபாத்

நடிப்பு: விஜய் சேதுபதி, மாஸ்டர் சூர்யா, அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா
தயாரிப்பு: எஸ்.என்.ராஜாராம், ஷான் சுதர்சன்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்கம்: எஸ்.யூ.அருண்குமார்

சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து பிக்பாக்கெட் அடிக்கும் விஜய்சேதுபதியிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்க வங்கி அதிகாரிகள் முயல்கின்றனர். அதற்கு போக்குகாட்டி ஏமாற்றி வரும் விஜய் சேதுபதி அஞ்சலியை பார்த்ததும் காதலில் விழுகிறார். அவரை மணக்க எண்ணும்போது அஞ்சலியின் தாய் மாமன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். கோபம் அடையும் விஜய் சேதுபதி தாய்மாமனை அடித்துவிட்டு அஞ்சலி கழுத்தில் தாலிகட்டுகிறார். மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் அஞ்சலி அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனது சம்பள பாக்கியை பெற்று வரச் செல்கிறார். சென்ற இடத்தில் அவரை ஒரு கூட்டம் அடைத்து வைத்து கடத்த முயல்கிறது. பிறகுதான் 5 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் மாமன் தன்னை அந்த கூட்டத்துக்கு விற்றது தெரிகிறது. தொலைபேசியில் இதுபற்றி விஜய்சேதுபதியிடம் அஞ்சலி கூறி அவரை மீட்டு வர 5 லட்சம் ரூபாயுடன் மலேசியா செல்கிறார். அஞ்சலியை அவர் எப்படி மீட்டு வருகிறார் என்பதை கடுமையான துரத்தல் பின்னணியுடன் படம் விளக்குகிறது. 
ஆக்‌ஷன், அட்வென்சர் காட்சிகளில் இதுவரை பார்க்காத விஜய் சேதுபதியை இப்படத்தில்  காணமுடிகிறது. சாலையில் விபத்து ஏற்படுத்தி மாஸ்டர் சூர்யாவுடன் சேர்ந்து கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடிப்பதில் தொடங்கும் அட்டகாசம் கிளைமாக்ஸில் மலேசியாவில் அடைபட்டு கிடக்கும் பெண்களை மீட்பதுவரை தொடர்கிறது. இதுவரை விஜய்சேதுபதி செய்யாத ரொமான்ஸையும் செய்திருக்கிறார். அஞ்சலிக்கு லிப் டு லிப் கொடுத்து அடே  போட வைக்கிறார். அஞ்சலியும் தாராளமாக விஜய் சேதுபதிக்கு முத்தமழை பொழிகிறார்.
தன்னை பின்தொடர்ந்து வந்து காதலிக்க வற்புறுத்தும் விஜய் சேதுபதியை துரத்து துரத்து என்று துரத்தும் அஞ்சலி பின்னர் அவரிடம் சரண்டர் ஆகி ஒட்டி உரசுவது சூடேற்றும் விஷயம்.
அஞ்சலியை ஒரு கூட்டம் மலேசியாவில் அடைத்து வைத்திருக்கிறது என்பதை அறிந்து அவரை மீட்டு வர விஜய்சேதுபதி புறப்பட்டதும் கதைக்களமே மாறிவிடுகிறது.

வில்லன் விவேக் பிரசன்னாவிடம் சிக்கிக்கொண்டு அவதிப்படுவதும் பிறகு அவரது அடியாட்களை துவைத்தெடுத்து ஓடும் போது ஆரம்பிக்கும் துரத்தல் இறுதிவரை நீடிக்கிறது.
20 அடுக்கு மாடியில் ஏறி நின்று கீழே இறங்கி தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்ளும் சமயத்தில் மாஸ்டர் சூர்யாவை அடுத்த பில்டிங்கிற்கு தாண்டி குதிக்கும்படி சொல்வதும் அவனும் ஓடிச்சென்று குதிக்க முயன்று தடுமாறி நிற்பதும் அரங்கை அமைதியாக்குகிறது. டெக்னிக்காக அங்கிருந்து சூர்யாவை அடுத்த பில்டிஙகிற்கு தப்ப வைக்கும் விஜய் சேதுபதி பிறகு தானே ஜம்ப் செய்வது அசத்தல்.
விஜய் சேதுபதிக்கு காது கேட்காது என்று ஒருபுறம் சொல்லிவிட்டு இன்னொருபுறம் கேட்க வேண்டிய விஷயமெல்லாம் கேட்கும் என்று இயக்குனர் சொல்லியிருப்பது அவர் காதுகேளாத வரா? இல்லையா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் அஞ்சலியும் சத்தம்போட்டு தான் பேசுவார் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனாலும் இவர்கள் இரண்டுபேரின் சேட்டைகளும் காட்சிக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. 
விஜய் சேதுபதியின் மகன் மாஸ்டர் சூர்யாவும் ஏதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் அப்பாவை போலவே கடுமையாக உழைத்திருக்கிறார். மலைப்பாங்கான பகுதியில் தப்பி ஓடுவது, மொட்டை மாடியிலியருந்து இன்னொரு மாடிக்கு தாவி குதிக்க முயல்வது என்று ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
படத்தின் முதல்பாதி முடியும்போதே முழுபடத்தை பார்த்துபோன்ற ஒரு உணர்வு…. முதல்பாதி யில் காட்சிகளை டிரிம் செய்தால் விறுவிறுப்பு கூடும். உடல் உறுப்பு திருட்டுபற்றி படங்கள் வந்திருக் கிறது. ஆனால் இயக்குனர் அருண்குமார் சொல்லியிருக்கும் உறுப்பு திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இப்படிக்கூட நடக்கிறதா என்று திகிலை ஏற்படுத்துகிறது. 
யுவன் சங்கர் ராஜாவின் இசை காட்சிகளுக்கு சக்கரமும், பாடல்களுக்கு இறக்கையும கட்டிவிட்டிருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு சில காட்சிகளை போட்டோ படமாக பதிய வைக்கிறது.

சிந்துபாத்-ஹாலிவுட் பாணி அட்வென்சர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close