விமர்சனம்

கென்னடி கிளப் (பட விமர்சனம்)

படம்: கென்னடி கிளப்
நடிப்பு: சசிகுமார். மீனாட்சி கோவிந்தராஜன். பாரதிராஜா
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: குருதேவ்
இயக்குனர்: சுசீந்திரன்

விளையாட்டை மையமாக வைத்து தமிழில் படங்கள் வருவது மிக மிக குறைவு. சில படங்களில் கபடி, வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் மையப்படுத்தப்பட்டிருந்தாலும் அதை முழுமையாக திரைக்கதையாக அமைத்து படமாக்குவதில்லை. இயக்குனர் சுசீந்திரன் சில வருடங்களுக்கு முன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம்தான் முழுக்க கபடி விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட கதை என்று பாராட்டு பெற்றது. அப்படம் திரைக்கு வந்து சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கபடியை மையமாக வைத்து அதுவும் பெண்கள் கபடி குழுவை மையமாக வைத்து கென்னடி கிளப் படத்தை இயக்கி உள்ளார். 

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பாரதிராஜா ஒட்டன்சத்திரம் கிராமத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து அவர்களை வாழ்வில் முன்னேற வைக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்றவர் சசிகுமார். அதே கிராமத்தில் உள்ள 10 பெண்களை கபடி வீராங்கனைகளாக்க முயற்சிக்கிறார்பாரதிராஜா. உடல்நல குறைவால் தனது பொறுப்பை சசிகுமாரிடம் ஒப்படைக்கிறார். அவர் முறைப்படி பயிற்சி அளித்து பல போட்டிகளில் வெற்றி பெற வைக்கிறார், இதில் ஒரு பெண் தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாட தேர்வாகிறார். ஆனால் 30 லட்சம் கொடுத்தால்தான் ஆட முடியும் என்று முரளி ஷர்மா கண்டிஷன் போடுகிறார். மனம் உடையும் அப்பெண் தற்கொலைக்கு முயல்கிறார். இதனால் மற்ற பெண்களை கபடி ஆட அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி கபடி குழுவை அமைத்து தேசிய போட்டியில் விளையாட அழைத்துச் செல்கிறார் சசிகுமார். அதில் இந்த குழுவினர் சேம்பியன் பட்டம் வென்றார்களா? இல்லையா என்பதற்கு உணர்ச்சி பிழம்புடன் பதில் அளிக்கிறது கென்னடி கிளப்.
கபடி பயிற்சியாளராக இருந்து பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் பாரதிராஜா தனது பண்பட்ட நடிப்பால் உரமேற்றுகிறார். விளையாட்டு துறையில் தாண்டவமாடும் அக்கிரமங்கள் அக்குவேறு ஆணிவேறாக கணீர் வசனங்களால் பீய்த்தெறிகிறார். வழக்கமாக சட்டை, வேட்டி அணிந்து கிராமத்து நாயகனாக தோன்றும் சசிகுமார் இப்படத்தில் டிஷர்ட் அணிந்து கழுத்தில் விசில் தொங்கவிட்டபடி ஃபிட்டான பயிற்சியாளராக கண்ணுக்குள் நிற்கிறார். பாரதிராஜாவுக்கும் சிசிகுமாருக்கும் இடையே நடக்கும் உரசல் திரைக்கதையின் விறுவிறு டெக்னிக். பெண்கள் டீமுக்கு பயிற்சியாளராக வரும் சூரி காமெடி செய்கிறார்.
விளையாட்டுத்தனமாக இல்லாமல் காட்சிகளை பக்காவாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிஜ கபடி வீராங்கனைகளை களத்தில் இறக்கிவிட்ட இயக்குனருக்கு சபாஷ் போடலாம். குறிப்பாக இரட்டை சககோதரிகளின் அறிமுகம் அவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகளை பெற்றுத்தரும். 
டி.இமான் இசையில் பாடல்கள் ஓஹோ என்றில்லாவிட்டாலும் பின்னணி இசையில் படத்தை நிற்க வைத்திருக்கிறார்.
கென்னடி கிளப்-ஸ்டேட் லெவல் சேம்பியன்.

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close