விமர்சனம்

குப்பத்து ராஜா (பட விமர்சனம்)

படம்:குப்பத்து ராஜா
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், ரா.பார்த்திபன், யோகிபாபு, பூனம் பஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், பாலக் லால்வானி, மதுமிதா, சந்திரசேகர், கிரண்
தயாரிப்பு: சரவணன் எம், சிராஜ் எஸ். சரவணன் டி.
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துஸ்வாமி
டைரக்‌ஷன்: பாபா பாஸ்கர்
குப்பத்தில் நண்பர்களுடன் ரவுசு காட்டி சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷும் பாலக் லால்வாணியும் காதலிக்கின்றனர். அதேபகுதியில் எம்ஜிஆர் ரசிகராக வலம் வரும் பார்த்திபன்  ஊரில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். குப்பத்துக்கு புதிதாக குடிவருகிறார் பூனம்பஜ்வா. அவர், பிரகாஷிடம் நெருங்கி பழகுவதை தவறாக எண்ணும் காதலி பாலக் கோபித்துக்கொள்கிறார். இதற்கிடையில் அதேபகுதியில சேட்டு நடத்தும் மிட்டாய் கம்பெனியில் போதை சாக்லெட் தயாரிக்கப்படுவது வெட்டவெளிச்ச மாகிறது. திடீரென்று சேட்டு கொல்லப்படுகிறார். இதற்கு பின்னால் நடக்கும் சதி என்ன என்பது கிளைமாக்ஸில் வெட்ட வெளிச்சமாகிறது. 

தரலோக்கலாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜி.வி.பிர காஷ், பாலக் லால்வானி வேடத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். சுள்ளான் போல் இருந்தாலும் பிரகாஷின் அலட்டலில் சூடு அதிகம். பார்த்திபனை அவ்வப்போது மறைமுகமாக தாக்கிப்பேசி பார்த்திபனிடம் மல்லுகட்டுவதும், பிரண்ட்சுகளுடன் சேர்ந்து மப்பு ஏற்றிக்கொண்டு லந்து பண்ணுவதுமாக தெறிக்க விட்டிருக்கிறார்.

 தந்தையை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்பதை அறிந்து கதறும் பிரகாஷ் கொலைகாரர் களை தேடி ரவுடி ஏரியாக்களுக்கு சென்று தைரியமாக விசாரிப்பதும் வேடத்துக்கு வலு.
தனது காதலன் ஜி.வி.பிரகாஷை பூனம் பஜ்வா ரூட்டு விடுவதாக எண்ணி பூனமை ஜாடை சொல்லி திட்டும்போது நறுக்கு தைக்கிறார் பாலக் லால்வாணி. ஆன்ட்டிபோல் வந்தாலும் ஐட்டங்களை காட்டி கிளாமர் கடைவிரித்து பளபளக்கிறார் பூனம்.

எம்ஜிஆரின் ரசிகராக வரும் பார்த்திபன் எம்ஜிஆர் தொப்பி அணிந்து கொண்டு ஊர்நியாயம் பேசுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுமாக வேடத்தை நிறைவு செய்திருக்கிறார். கவுன்சிலராக வந்து வில்லனத்தை அளந்து நடித்திருக்கிறார் கிரண். மெட்ராஸ் பாஷையில் ஊறிப்போன வராகவே ஆகியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஜி.வி.பிராகஷின் நண்பராக வரும் யோகிபாபுக்கு சிரிப்பு காட்ட அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் நடிக்க வேண்டிய இடத்தில் நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை.

இப்படித்தான் சீன் இருக்கணும், இப்படித்தான் கேரக்டர்கள் பேசணும் என்பதை தீர்மானித்துக்கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் பாபா பாஸ்கர். தொடக்கத்தில் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் சிறிது நேரத்தில் நொண்டியடிக்கிறது. சில இடங்களில் கத்தரிபோட்டால் வேகம் பிக் அப் எடுக்கும். இடைவேளைக்கு பிறகு காட்சிகள் மீண்டும் பரபரக்கிறது. 
தான் நடிக்கும் படம் என்பதால் ஸ்பெஷல் இசை என்று எதையும் புகுத்தாமல் அடக்கி வாசித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் காட்டும் தீவிரத்தை இசையிலும் காட்டவேண்டியது அவசியம்.
குப்பத்து ராஜா- குப்பத்துக்குள் புகுந்து வந்த அனுபவம்.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close