விமர்சனம்

ஒரு அடார் லவ் (பட விமர்சனம்)

நடிகர்கள்: ரோஷன் அப்துல் ரஹூப், பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப்
வெளியீடு:கலைப்புலி எஸ்.தாணு
இசை:யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: சீனு சித்தார்த்
இயக்கம்: ஓமர் லுலு

ஒரே இரவில் ஒரு நடிகையை உலகம் முழுவதும் பிரபலபடுத்திய படம் ஒரு அடார் லவ். கண்ணடித்து, நமட்டு சிரிப்பு சிரித்து, விரல் துப்பாக்கியால் காதல் தோட்டாவை சுட்டு காதலன் மட்டுமல்லாமல் காளையர்கள்  இதயத்தையும் கொள்ளை அடித்த பிரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் விளையாட்டு திரைக்கு எப்போது வரும் என்று ஒரு வருடத்துக்கும் மேலாக ஆவலாக எதிர்பார்த்த நிலையில் தற்போது சத்தமில்லாமல் வெளியாகி மீண்டும் அதிரடி கிளப்பிக்கொ ண்டிருக்கிறது. ஒரு கதையை செய்தாலும் உருப்படியாக செய்ய வேண்டும் என்பதற்கிணங்க காதல் என்ற ஒற்றை வார்த்தையை மையப்படுத்தி பள்ளிக்கூட அறைக்குள் அதை பரவிட்டிருக்கும் இயக்குனர் ஓமர் லுலு இளவட்டங்களின் நாடித் துடிப்பை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். 
பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் சேரும் ரோஷன் சக மாணவி பிரியா வாரியரின் அழகில் மயங்கி அவரை காதலிக்கிறார். இந்த காதலுக்கு தூதாக இருக்கிறார் தோழி நூரின் ஷெரீப். ரோஷனின் காதலை பிரியாவுக்கு எடுத்துச் சொல்லி இருவரையும் காதலில் கைகோர்க்கச் செய்கிறார். மென்மையாக செல்லும் காதலில் குறுக்கே புகுந்து கட்டையை போடுகிறார் ரோஷனின் நண்பர். அது வினையாகிறது. பிரியா, ரோஷனுக்கு இடையேயான  காதல் பிரேக் அப் ஆகும் அளவுக்கு நிலைமை முற்றுகிறது. காதல் முறிந்த சோகத்தில் ரோஷன் விரக்தியுடன் அலைகிறார். அதைக்கண்ட நண்பன், பிரிந்த காதலை சேர்த்து வைக்க எண்ணுகிறான். பிரியாவாரியரின் சுயநலபோக்கான மனதை அறிந்து வைத்திருக்கும் நண்பன் ரோஷனுக்கு புதுயோசனை சொல்கிறான். காதல் தூதராக செயல்பட்ட நூரினையும், ரோஷனையும் காதலிப்பதுபோல் நடிக்கச் சொல்கிறான். அதைக்கண்டு கடுப்பாகி மீண்டும் ரோஷனை பிரியா காதலிக்க வருவார் என்பதுதான் இந்த நாடகத்தின் முடிவாக இருக்கும் என்று கணக்குபோடுகிறார்கள். ஆனால் நிலைமை வேறுவிதமாகிறது. போலியாக காதலிக்கத் தொடங்கும் ரோஷனும், நூரும் நிஜமாகவே காதலிக்கத் தொடங்குகின்றனர். அதன் முடிவு விபரீதமாகிறது. 

இளசுகளின் மனதில் அச்சாக பதியும் முதல் காதல் பள்ளிபருவத்திலேயே தொடங்கி விடுகிறது. அப்படி இரு மனங்களுக்கு இடையே தொடங்கும் காதலின் போக்கை நாடி பிடித்து வைத்தியம் பார்த்திருக்கிறார் இயக்குனர். இதுபோன்ற காதலுக்கு குறும்புத் தனம் நிறைந்த ஜோடி அவசியம் என்பதை தீர்மானித்து ரோஷனையும், பிரியா வாரியரையும் வகுப்பில் கட்டவிழித்துவிட இருவரும் கண்களால் பேசியும், விரல்களால் சிக்னல் கொடுத்தும் செய்யும் சிலுமிசங்கள் கண்ணுக்குள் பசுமையாக பதிகிறது.

எப்போது வரும் அந்த கண் சிமிட்டால், எப்போதுவரும் அந்த விரல் துப்பாக்கி தோட்டா என ரசிகர்கள் ஆவலாக பார்க்க இதுவும் கடந்துபோகும் என்பதுபோல் அந்த காட்சியும் கடந்து போகிறது. ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்திருந்ததால் பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் இக்காட்சிகள் நகர்கிறது. ஆனால் அதைவிட நிறைய சென்டிமென்ட், காதல் சித்து விளையாட்டுகள் படத்தை கடைசிவரை விறுவிறுவென நகர்த்தி செல்கிறது. 

பிரியாவாரியரின் சேட்டைகள் ஏற்கனவே தெரிந்திருந்தநிலையில் வெளியில் தெரியாமல் பொத்திவைக்கப்பட்ட நூரின் ஷெரீப்பின் நடிப்பும் தற்போதைக்கு பேசுபொருளாகியிருக்கிறது. எல்லோருக்கும் உதவும் அவரின் குணம் சென்டிமென்ட்டாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

விடலை மாணவரின் காதல் டீச்சர் வரை பாயும் என்பதை இயக்குனர் குறிப்பால் உணர்த்தி சிரிக்க வைக்கிறார். நள்ளிரவில் சந்தேகம் கேட்க வரும் மாணவனை அந்த ஆசிரியை வித்தியாசமாக எதிர்கொண்டு கவர்கிறார். சந்தோஷமாக படம் பார்க்க வரும் ரசிகர்களை கிளைமாக்ஸ் முடிந்தபின் கனத்த மனதுடன் வெளியே அனுப்பும் இயக்குனரின் திரைக்கதை கையாடல் கத்திமேல் நடப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஷான் ரகுமான் இசையில் பாடல்கள் கவிதை அருவியாக கொட்டுகிறது. மாணவ மாணவர் களை வைத்துக்கொண்டு என்ன ஒளிப்பதிவு செய்வது என்று சோர்ந்துபோகாமல் அவர்களுக் கிடையேயான சிலுமிச சீண்டல்களை படம் முழுக்க கிரகித்து தந்திருக்கிறார் கேமரா மேன் சீனு சித்தார்த்.

‘ஒரு அடார் லவ்’ காதல் இடி.

 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close