விமர்சனம்

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல (பட விமர்சனம்)

படம்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

நடிப்பு: ஜெகன். மனிஷா ஜித் பிறைசூடன். விவேக்ராஜ். டிசோசா. சாம்ஸ்

தயாரிப்பு:ராஜாமணி தியாகராஜன்

கதை,வசனம்:கரைக்குடி நாராயணன்
இசை கவின் சிவா
ஒளிப்பதிவு சிவராஜ்
இயக்குனர் முருகலிங்கம்

போலீஸ் வேலையில் சேர்ந்தால்தான் ஜெகனை கல்யாணம் செய்துகொள்வேன் என்று கண்டிஷன்போடுகிறார் மாமன் மகள் மனிஷாஜித். ஒருவழியாக ஜெகன் போலீஸ் கான்ஸ்டபிள் ஆகிறார். அதே ஊரில் கந்துவட்டிக்கு பணம் தந்து வசூலிக்கும் பிறைசூடன் போலீஸையே தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார். தனது மகள் டிசோசாவை காதலிக்கும் சலவை தொழிலாளியின் மகன் விவேக் ராஜ் மீது பொய் புகார் கொடுத்து அவரை சிக்க வைக்கிறார். எதிர்ப்பையும் மீறி இளம் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் போலீஸ்காரர் ஜெகன். இதையறிந்த பிறைசூடன் ஜெகனை தாக்க முற்படுகிறார். இந்த ஆபத்திலிருந்து ஜெகனும் காதல் ஜோடிகளும் எப்படி தப்புகின்றனர் என்பதே கதை

பல படங்களில் ஹீரோக்களுக்கு நண்பராக நடித்திருக்கும் காமெடி நடிகர் ஜெகன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரலுக்கு ஏற்ற வீக்கம்போல் கதாபாத்திரத்தை தன் இஷ்டத் துக்கு ஆக்‌ஷன் அதிரடி என்ற ரேஞ்சிக்கு மாற்றிக்கொள்ளாமல் எளிமையான, உணர்வுப் பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நம்பும்படி உள்ளது. மனிஷாஜித் தனது காதலியாக இருந்தாலும் அவரிடம் எல்லை மீறாமல் காதல் காட்சியில் நடித்து பெயரை தக்க வைத்துக் கொள்கிறார்.

மனிஷாஜித் தாவணி மாற்றும் சமயத்தில் வீட்டுக்குள் நுழைந்த ஜெகன் அவரை கண்டு கிரங்குவது இளசுகளுக்கு லேசாக கிடைக்கும் கவர்ச்சி விருந்து. 

சலவை தொழிலாளி மகனாகவும், பத்திரிகையாளராகவும் வரும் விவேக்ராஜ் காதலி டிசோசாவை கரம்பிடிப்பதில் உறுதியாக நிற்கும்போது நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கந்துவட்டிக்காராக வரும் பிறைசூடன் ஆர்ப்பாட்டமில்லாத வில்லனாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற வில்லத்தனத்தை கடைபிடித்து கவிஞர் என்ற தனது ஒரிஜினல் முகத்தை கெடுத்துக்கொள்ளாதது பாராட்டுக்குரியது. சாம்ஸ், அம்பானி சங்கர், ரவிகுமார், நிகிதா போன்றவர்களும் சோடை போகவில்லை. 

எளிமையான காதல் கதையை சிற்றூர் சூழலுடன் காரைக்குடி நாராயணன் அமைக்க அதை அப்படியே அச்சுமாறாமல் இயக்கியிருக்கிறார் முருகலிங்கம். ஆக்‌ஷனுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருப்பதால் விறுவிறுப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கவின் சிவா இசை ஒகே ரகம்.

‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே- கலாட்டா கல்யாணம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close