விமர்சனம்

அக்னி தேவி (பட விமர்சனம்)

படம்:அக்னி தேவி
நடிப்பு: பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ்
தயாரிப்பு: ஜேபிஆர், ஸ்டாலின்
இசை:ஜாகேஷ்பிஜாய்
ஒளிப்பதிவு: விக்ன ஜான், சூர்யா
இயக்கம்: ஜே.பிஆர், ஷாம் சூர்யா

வட இந்தியாவில் ஒரு எம்பி கொலை செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் டிவி பெண் நிருபர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலை தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்கிறார்கள். சம்பவத்தை பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா இந்த கொலைகளுக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடிப்பதுடன், பெண் நிருபர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபர் ஒரு அப்பாவி என்பதை தெரிந்துகொள்கிறார். அந்த வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் பாபி சிம்ஹாவை மற்றொரு ரவுடி கூட்டம் கொலை செய்ய துரத்துகிறது. எல்லா கிரிமினல் சம்பவங்களுக்கும் அரசியல்வாதி மதுபாலாவின் சூழ்ச்சிதான் பின்னணயில் இருக்கிறது என்பது பாபி சிம்ஹா வுக்கு தெரியவர அவருடன் நேருக்கு நேர மோத முடிவு செய்கிறார். இந்த மோதலில் ஜெயிப்பது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
தமிழ்நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களை இடம்பொருள் மாற்றி அதற்கு பின்னால் என்னவிதமான அரசியல் இருந்திருக்கும் என்பதை திரட்டி கதை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா விரைப்புடன் நடித்திருக்கிறார். பெண் நிருபர் கொலை வழக்கை விசாரிக்கப்போய் அது மினிஸ்டர் லெவலுக்கு செல்வதை கண்டும் பின்வாங்காமல் துணிச்சலுடன் எதிர்ப்புகளை சமாளிப்பது சாதுர்யம். ஒரு கட்டத்தில் மினிஸ்டர் மதுபாலாவுடன் போனில் பேசும்போது ஒருவருக்கொருவர் விடும் சவால்கள் சரிபோட்டி.. 
மதுபாலாவை இப்படியொரு கோலத்தில் இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு கதாபாத்திரத்தில் மூழ்கியிருக்கிறார். ஓவராக மூழ்கியிருப்பதால் நடிப்பும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகவே இருக்கிறது. ‘உன் கண்முன்னாள ஒரு பெண் எமனா வந்து நிப்பா என்று பாபிசிம்ஹாவிடம் ஆவேசப்படும்போது கொப்பளிக்கிறார். யாரையோ குறிப்பிடுவதுபோல் கதாபாத்திரங்களை அமைத்து பின்னர் இயக்குனர் ஜகா வாங்கி வெவ்வேறு களத்துக்குள் அவர்களை புகுத்தியிருப்பது எஸ்கேப்பிசம். 
டிரக்கில் பணம் கடத்துவது, பஸ்நிலையத்தில் பெண்ணை கொல்வது, அப்பாவி இளைஞனை கொலை வழக்கில் சிக்க வைப்பது போன்ற சில காட்சிகள் நிஜசம்பவங்களை எதிரொலிக்கிறது. போலீஸ் கமிஷனராக வரும் போஸ் வெங்கட், மதுபாலாவின் மிரட்டலுக்கு நடுங்கி பணியாற்றுவது யதார்த்தம். ரம்யா நம்பீசன் பெயருக்கு வந்துசெல்கிறார். சதீஷ் காமெடி செய்ய முயற்சிக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் தலைகாட்டுகிறார் லிவிங்ஸ்டன்.
நாட்டு நடப்பு, அரசியல் சம்பவங்களை திரைக்கதையாக தொகுத்து சூடுகுறையாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜேபிஆர். ஷாம் சூர்யா. சில இடங்களில் காட்சிகள் தொடர்பில்லாமல் வந்து செல்கிறது.
அக்னி தேவி மதுபாலாவின் மிரட்டல்.

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close