விமர்சனம்

அகவன் (பட விமர்சனம்)

படம்:அகவன்
நடிப்பு: கிஷோர் ரவிச்சந்திரன், சிறா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹெலோ கந்தசாமி, மீராபாய், ஆர்என்ஆர் மனோகர், மணிகுட்டி. வெங்கட் ரமேஷ், வைரபாலன், ஸ்டீபன் செல்வன், அம்பாய் கார்த்தி, 
தயாரிப்பு:ஆர்.ரவிச்சந்திரன்
இசை: சி.சத்யா
ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன்
டைரக்‌ஷன்: ஏபிஜி.ஏழுமலை

அகத்தீஸ்வரன் கோயிலில் பசுமடத்தில் பணியாற்றுகிறார் கிஷோர். அவருடன் வேலைசெய்கிறார் தம்பிராமையா. தன் அண்ணன் சாவுக்கு தானே காரணமாக இருந்ததாக வருந்தும் கிஷோர் அந்த பாவத்தை போக்கவே கோயிலில் பணியாற்றுவதாக கூறுகிறார். கோயிலில் பல்வேறு மர்மசம்பவங்கள் நடக்கிறது. அப்பகுதியையொட்டி உள்ள மனநல காப்பகத்தில் அடிக்கடி அலறல் சத்தம் கேட்கிறது. இரவு நேரத்தில் கோயில் பகுதியில் பேய் நடமாடுவதாக ஒரு வதந்தியும் உலவுகிறது. இவ்வளவுக்கும் பின்னணியில் உலக அளவிலான பணக்காரர்கள் ஒன்றிணைந்து ஒரு திட்டம் வகுத்திருக்கின்றனர். மன்னர் காலத்தில் கோயில்களில் புதைத்து வைக்கப்பட்ட புதையலை திருடுவதற்காக நடக்கும் முயற்சி ஒருபக்கம் நடக்கிறது. இந்த திட்டங்களை கண்டறிந்து அவர்களை எப்படி சிக்கவைக்கிறார் ஹீரோ கிஷோர் என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரன் பந்தா நடிப்பில் ஈடுபடாமல் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். புதையல் ரகசித்தை மறைத்து வைத்திருக்கும் இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ரகசியத்தையும் மறைத்து வைத்து அவ்வப்போது சஸ்பென்ஸ் தருகிறார். போலீஸ் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கி செல்கிறார் கிஷோர். திடீரென்று அவரே ஒரு போலீஸ் அதிகாரி என்ற சஸ்பென்ஸ் உடையும்போது கதையின் போக்கு மாறுகிறது. 
கோயிலுக்குள் ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்துகொள்ளும் கிஷோர். கும்மிருட்டிலும் பதுங்கி சென்று அவர்களை துரத்தி பிடிப்பது மிரட்டல். 
எப்போதுமே அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு சுற்றிவரும் கிஷோர் அமைதியான நடிப்பில் கவர்ந்தாலும் ஹீரோவுக்கான துள்ளலை ரொம்பவே குறைத்துக்கொண்டிருக்கிறார்.
முதல்பாதிவரை கதையின்போக்கு ஏதோ ஒரு அசாதாரணமான நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. 2ம் பாதியில் அந்த சஸ்பென்சை உடைத்து மன்னர் காலத்தில் கோயில்கள் கட்டியது ஏன் என்று ஆராய்ச்சி புள்ளிவிவரங்களை அம்பலப்படுத்தும்போது ஓஹோ போட வைக்கிறார். ஓலைசுவடி கல்வெட்டி ஆராய்ச்சி குறிப்புகள் பற்றிய தகவல்களையும் வசனத்தோடு இணைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. சிறா ஸ்ரீயின் முகத்தில் சாந்தம் தெரிந்தாலும தன் தந்தையின் கடனை அடைப்பதற்காக சட்டவிரோதமான கும்பலுக்கு துணைபோகும்போது மாறுபடுகிறார்.

நித்யா ஷெட்டி, கிஷோரை காதல் வலையில் சிக்க வைக்க கொக்கி போடும்  ஒரே வேலையைத் தான் செய்திருக்கிறார். அமைதியாக செல்லும் கதையில் ஆங்காங்கா காமெடி சிதறல்களை சிதற விடுகிறார் தம்பி ராமையா. ரொம்ப நாளைக்கு பிறகு தலைகாட்டியிருக்கும் சரண்ராஜ், போலீஸ் உயர் அதிகாரியாக வில்லன்போல் காட்டிக்கொண்டு பின்னர் நல்லவராக அதே கதாபாத்திரத்தில் மூழ்கிபோயிருக்கிறார்.

காட்டுப்பகுதி, ஊர் பகுதிகளை அப்பட்டமாக படம்பிடித்திருக்கிறது பாலா பழனியப்பன் கேமரா. மேம்போக்காக கதையை சொல்லாமல் சரியான விளக்கவுரைகளை ஆராய்ச்சி கட்டுரைபோல் அலசி அதை காட்சிகளில் அப்ளை செய்திருக்கும் இயக்குனர் ஏபிஜி.ஏழுமலை கடைசிவரை இருக்கையில் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். சி.சத்யாவின் இசையும் பின்னணி இசையும் பலம் சேர்க்கிறது. ஒரு சில காட்சிகள் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நீளமாக இருக்கிறது. அத்தகைய காட்சிகளுக்கு கத்தரி போட்டால் கதையின் விறுவிறுப்பு இன்னமும் கூடும். 
‘அகவன்’ உயர் நிலை கோபுரங்களுடன் கூடிய கோயில்கள்பற்றிய கட்டுரையை விறுவிறுப்பு குறையாமல் படித்த உணர்வு ஏற்படுகிறது.

 
அகவன் – திரில்லர்.
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close